ஈரோடு மாநகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், தே.மு.தி.க. கூட்டத்தில் தீர்மானம்

ஈரோடு மாநகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தே.மு.தி.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Update: 2018-08-06 22:00 GMT

ஈரோடு,

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆய்வுக்குழு கூட்டம் ஈரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில பொருளாளர் வி.இளங்கோவன் தலைமை தாங்கினார்.

மாவட்ட துணைச்செயலாளர்கள் எஸ்.ஆனந்த், வி.சி.தங்கவேல், கே.லாவண்யாகுமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாநில துணைச்செயலாளர்கள் ப.பார்த்தசாரதி, ஏ.எஸ்.அக்பர், விசாரணைக்குழு உறுப்பினர் ஆர்.அழகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

* கட்சியின் நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாளான வருகிற 25–ந் தேதி அன்று மாவட்டம் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

* ஈரோடு மாநகரில் ஏற்பட்டு உள்ள போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய ரிங்ரோடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் ஈரோடு மாநகரில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

* வருகிற செப்டம்பர் மாதம் 16–ந் தேதி திருப்பூரில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு ஈரோடு மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரம் தொண்டர்கள் செல்ல வேண்டும்.

* பவானி லட்சுமிநகர் முதல் விஜயமங்கலம் சுங்கச்சாவடி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அந்த பகுதியில் மேம்பாலம் அமைத்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் முருகானந்தம், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலாஜி, ரெங்கராஜ், குமார், பகுதி செயலாளர்கள் நைனாமலை, செந்தில்குமார், மாரிமுத்து உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். முன்னதாக மாவட்ட செயலாளர் கோபால் வரவேற்று பேசினார். முடிவில் பொருளாளர் முருகன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்