குடிநீர் திட்டத்தின் கீழ் 5 மாவட்டங்களில் 527 ஏரிகளை தூர்வார வேண்டும் குமாரசாமி உத்தரவு

எத்தினஒலே குடிநீர் திட்டத்தின் கீழ் 5 மாவட்டங்களில் 527 ஏரிகளை தூர்வார வேண்டும் என்று அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவிட்டார்.

Update: 2018-08-06 22:38 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் அரபிக்கடலில் கலந்து வருகிறது. இதை தடுத்து கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு, ஹாசன், பெங்களூரு புறநகர் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கர்நாடக அரசு எத்தினஒலே குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது. ஆனால் வனப்பகுதி வழியாக இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளாக இந்த திட்ட பணிகள் மந்தமாக நடைபெற்று வந்தது. தற்போது இதில் இருந்த சில நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு ஏற்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் எத்தினஒலே குடிநீர் திட்ட பணிகள் குறித்த உயர்மட்ட ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் சபாநாயகர் ரமேஷ்குமார், நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார், விவசாயத்துறை மந்திரி சிவசங்கரரெட்டி, கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா உள்பட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் குமாரசாமி பேசியதாவது:-

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்யும் மழைநீர் அரபிக்கடலில் கலக்கிறது. அந்த தண்ணீரை தடுத்து வறட்சி மாவட்டங்களான கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு, ஹாசன், பெங்களூரு புறநகர் ஆகிய 5 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எத்தினஒலே குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. குடிநீர் வினியோகம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கத்தில் இந்த எத்தினஒலே குடிநீர் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.

இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக அந்த 5 மாவட்டங்களில் உள்ள 527 ஏரிகளை தூர்வார வேண்டும். அதன் பிறகு அந்த ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும். அந்த ஏரிகளில் சேகரிக்கப்படும் தண்ணீரை கொண்டு கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த எத்தினஒலே குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வசதியாக நிலம் கையகப்படுத்த 3 அதிகாரிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள். இந்த திட்டத்திற்கு தேவையான 5 ஆயிரம் ஏக்கர் நிலம் 21 கிராமங்களில் கையகப்படுத்தப்படுகிறது. அந்த நிலத்திற்கு தேவையான இழப்பீடு வழங்க அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குமாரசாமி பேசினார்.

இந்த கூட்டத்தில் அந்த 5 மாவட்டங்களின் கலெக்டர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து சிறிய நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுடன் குமாரசாமி ஆலோசனை நடத்தினார். இதில் சிறிய நீர்ப்பாசனத்துறை மந்திரி எஸ்.ஆர்.சீனிவாஸ் உள்பட மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய குமாரசாமி, “கர்நாடகத்தில் உள்ள ஏரிகளை பாதுகாத்து அவற்றை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகள் அரசு தனியார் பங்களிப்பில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏரிகளின் நிலத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது. ஏரிகளின் நீர்த்தேக்க திறனை அதிகரிக்க வேண்டும்“ என்றார்.

மேலும் செய்திகள்