தொழிலாளி கொலை வழக்கில் அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை

தொழிலாளி கொலை வழக்கில் அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் விரைவு கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Update: 2018-08-06 22:53 GMT
திருப்பத்தூர், 



திருப்பத்தூர் அருகே புதுகாலனி வெங்களாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 40), தொழிலாளி. கடந்த 18.7.2012 அன்று அந்த பகுதியில் நடந்த சவ ஊர்வலத்தில் அதே பகுதியை சேர்ந்த சிங்காரவேலன் (28), அவரது தம்பி முரளி (24) ஆகிய 2 பேரும் நடனமாடினர். அப்போது முருகன் நடனமாடக்கூடாது என்று தெரிவித் துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மறுநாள் வெங்களாபுரத்தில் உள்ள சங்கர் என்பவருக்கு சொந்தமான டீக்கடையில் முருகன் டீ குடித்து கொண்டு இருக்கும்போது, அங்கு வந்த சிங்காரவேலன், முரளி ஆகிய 2 பேரும் சேர்ந்து முருகனை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே முருகன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிங்காரவேலன், முரளி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு திருப்பத்தூர் கூடுதல் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி இந்திராணி, அண்ணன்-தம்பிகளான சிங்காரவேலன், முரளி ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

மேலும் பொதுஇடத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரமேஷ் வாதாடினார்.

அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் 2 பேரையும் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்