‘நோயால் அவதியடைவதால் என்னை கருணை கொலை செய்யுங்கள்’ - போலீஸ் கமிஷனரிடம் முன்னாள் ராணுவ வீரர் கதறல்

‘நோயால் அவதியடைவதால் என்னை கருணை கொலை செய்யுங்கள்‘ என்று போலீஸ் கமிஷனரிடம் முன்னாள் ராணுவ வீரர் கதறி அழுதார்.

Update: 2018-08-06 23:54 GMT
சேலம்,

சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று காலை சுமார் 85 வயதுடைய முதியவர் ஒருவர் வந்தார். பின்னர் அவர் அங்கிருந்த போலீசாரிடம், நான் கமிஷனரை பார்க்க வேண்டும் என்று கூறினார். என்ன காரணத்திற்காக கமிஷனரை சந்திக்க வேண்டும் என்று அவரிடம் போலீசார் கேட்டனர்.

அதற்கு அந்த முதியவர், நான் முன்னாள் ராணுவ வீரர் என்றும், என்னை கருணை கொலை செய்ய வேண்டும் என்று கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அவரிடம் நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி விசாரித்தார்.

அப்போது அவரிடம் அந்த முதியவர், தன்னுடைய பெயர் கிருஷ்ணன்(வயது 85) என்று கூறியதுடன் முன்னாள் ராணுவ வீரர் என்பதற்கான அடையாள அட்டையை காண்பித்தார். தொடர்ந்து அவர் கூறும் போது, நான் தற்போது அம்மாபேட்டையில் வசித்து வருகிறேன். எனக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுகிறது. மேலும் நீரழிவு உள்ளிட்ட நோயினால் அவதியுற்று வருகிறேன். உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை கருணை கொலை செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடும் குளிரிலும் பணியாற்றி இருக்கிறேன். கடந்த 1971-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றேன்‘ என்றார். பின்னர் கிருஷ்ணனிடம், உங்களை நல்ல ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று தேவையான சிகிச்சை அளிக்கிறோம். அதற்கான ஏற்பாடுகளை செய்யட்டுமா? என கருணாநிதி கேட்டார். அதற்கு கிருஷ்ணன் சிகிச்சை எல்லாம் வேண்டாம், என்னுடைய ஒரே முடிவு உயிரை விடுவது தான், ஆகையால் என்னை கருணை கொலை செய்யுங்கள் என்றார்.

இதற்கிடையில் போலீஸ் கமிஷனர் சங்கர் அவரிடம் நேரில் வந்து விசாரித்தார். அவரிடமும், தான் நோயால் அவதியடைவதால் என்னை கருணை கொலை செய்யுங்கள் என்று கூறி கதறி அழுதார். அப்போது, அவரை காப்பகத்தில் தங்க வைத்து தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அளிக்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து கிருஷ்ணனின் எண்ணத்தை மாற்ற தொடர்ந்து அவரை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். மேலும் அவருடைய உறவினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைத்து பேச போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்