விசைப்படகு மீது கப்பல் மோதல்: இறந்த மீனவர்கள் குடும்பத்துக்கு தகுந்த நிவாரண உதவி வழங்க வேண்டும்

கேரளாவில் விசைப்படகு மீது கப்பல் மோதியதில் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்துக்கு தகுந்த நிவாரண உதவி வழங்க வேண்டும் என ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.

Update: 2018-08-07 22:45 GMT
கருங்கல்,

குமரி மாவட்டம் ராமன்துறையை சேர்ந்தவர் ஏசுபாலன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் ஏசுபாலன் உள்பட 14 மீனவர்கள் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற கப்பல் விசைப்படகு மீது மோதியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் மாயமானார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் அதிகாலையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற கப்பல் மோதியது.

இதில் படகில் இருந்த 14 பேரும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் குமரி மாவட்டம் ராமன்துறையை சேர்ந்த யாக்கோபு, யுகநாதன் முள்ளூர்துறையை சேர்ந்த சகாயராஜ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். மேலும், 9 மீனவர்கள் மாயமானார்கள். அவர்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தகுந்த நிவாரண உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்