ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-08-07 22:15 GMT
குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். போராட்டத்திற்கு அரசு அலுவலர் ஒன்றிய முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கரபாணி முன்னிலை வகித்தார். உள்ளிருப்பு போராட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆபரேட்டர்கள் சின்னப்பிள்ளை, ரவி, அன்பரசு, பெரியசாமி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் வருகிற 13-ந்தேதிக்குள் ஏழாவது நிதிக்குழு ஊதிய பரிந்துரையின்படி சம்பளம் வழங்குவதாக கடிதம் மூலம் தெரிவித்ததன் பேரில் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்