செல்போன் கடைக்காரரிடம் நூதனமுறையில் பண மோசடி

வேடசந்தூரில், நூதன முறையில் செல்போன் கடைக்காரரிடம் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் ரூ.10 ஆயிரத்தை மோசடி செய்துள்ளனர்.

Update: 2018-08-07 21:30 GMT
வேடசந்தூர், 


வேடசந்தூரில் வடமதுரை சாலையில் காளிராஜ் என்பவர் செல்போன் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மாலை இந்த கடைக்கு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள், தாங்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், வேடசந்தூர் அருகே விட்டல்நாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மில்லில் தங்கி பணிபுரிவதாகவும், தங்கள் பெற்றோர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை வைத்துக்கொண்டு, மருத்துவமனை செலவுக்கு ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் அந்த செல்போன் மற்றும் அதனை வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றை காளிராஜிடம் சிறிய கைப்பையில் இருந்து எடுத்து காட்டியுள்ளனர்.

அவர்களை கண்டு பரிதாபப்பட்ட கடைக்காரர் காளிராஜ், செல்போன் இருந்த பை மற்றும் ஆதார் அட்டை நகலை பெற்றுக்கொண்டு ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார். அந்த ஆதார் அட்டையில் உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி பகுதியை சேர்ந்த குல்பாம் (வயது 27) என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. பணத்தை பெற்றதும் 2 வாலிபர்களும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே மின்னல் வேகத்தில் கிளம்பினர்.

இதையடுத்து காளிராஜ், செல்போன் இருந்த பையை பிரித்து பார்த்தார். அதில், பேப்பர் சுற்றப்பட்ட நிலையில் செல்போன் போல கனமான கண்ணாடி வைக்கப்பட்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். நூதனமுறையில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த காளிராஜ், அவர்களை பிடிப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேடசந்தூரில் உள்ள அனைத்து தெருக்களிலும் தேடினார். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும் அந்த வாலிபர்கள் வேலை செய்வதாக கூறிய மில்லுக்கு சென்று ஆதார் அட்டையை காண்பித்து காளிராஜ் விசாரித்தார். ஆனால் ஆதார் அட்டையில் இருப்பவரை தங்களுக்கு தெரியாது என்று அங்கு வேலை செய்பவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வேடசந்தூர் போலீல் நிலையத்தில் காளிராஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்