வாழ்வாதாரத்தை மேம்படுத்த 1,453 நெசவாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது கலெக்டர் தகவல்

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கரூரில் 1,453 பயனாளிகளுக்கு நெசவாளர் கடன் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.

Update: 2018-08-07 22:30 GMT
கரூர்,

கரூர் வெங்கமேட்டில் நடைபெற்ற 4-வது தேசிய கைத்தறி தின விழாவினை மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான பொது மருத்துவ பரிசோதனை முகாமினை பார்வையிட்டு 20 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவுகளையும், 15 பயனாளிகளுக்கு முத்ரா நெசவாளர் கடன் அட்டையினையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியபோது கூறியதாவது:- சுதந்திர போராட்டத்தின் ஒரு பகுதியாக சுதேசி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு மக்களின் ஒருங்கிணைப்புக்கும், வாழ்க்கை மேம்பாட்டிற்கும் உறுதி அளிக்கும் வகையில் இருந்தது. அந்த வகையில் கைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பொருட்டு சுதேசி இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட ஆகஸ்டு 7-ந் தேதியை கைத்தறி தினமாக கடைபிடித்து வருகிறோம். விவசாயத்திற்கு அடுத்தபடியாக கைத்தறி தொழில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. இத்தகைய சிறப்புமிக்க கைத்தறி தொழிலின் வளர்ச்சிக்காக அரசு 1½ கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும், கைத்தறி துணி விற்பனைக்கு மானியம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தி வருகிறது.

மேலும் நெசவாளர்களுக்காக முதியோர் உதவித்தொகை மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கும் திட்டம், முதல்-அமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு வழங்கும் திட்டம், கைத்தறி நெசவாளர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு 500 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு ஆயுள் காப்பீட்டுத்திட்டம், கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ காப்பீட்டுத்திட்டம், அவர்களது குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்கும் திட்டம், உற்பத்தி பொருட்களில் புதுமை முயற்சியை செய்யும் நெசவாளர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், கரூர் மாவட்டத்தில் 2015-16-ம் ஆண்டில் 271 நபர்களுக்கு ரூ.1 கோடியே 35 லட்சமும், 2016-17-ம் ஆண்டில் 445 நபர்களுக்கு ரூ.2 கோடியே 15 லட்சமும், 2017-18-ம் ஆண்டில் 625 நபர்களுக்கு ரூ.2 கோடியே 87 லட்சமும், 2018-19-ம் ஆண்டில் இதுவரை 112 நபர்களுக்கு ரூ.56 லட்சமும் என மொத்தம் 1,453 நபர்களுக்கு முத்ரா நெசவாளர் அட்டை மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், கைத்தரி உதவி இயக்குனர் வெற்றிசெல்வன், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, கரூர் மாவட்ட அ.தி.மு.க. அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கூட்டுறவு கைத்தரி சங்க முன்னாள் தலைவர் எஸ்.திருவிகா, கரூர் நகர் மன்ற முன்னாள் தலைவர் எம்.செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்