அண்ணா பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு

அண்ணா பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீட்டில் நடைபெற்ற முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2018-08-07 23:30 GMT

மதுரை,

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

அண்ணா பல்கலைக்கழகம், அதன்கீழ் இயங்கும் என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு தேர்வு அட்டவணையை பல்கலைக்கழகத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி உள்ளிட்டவர்கள் தயார் செய்வது வழக்கம். கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதம் நடந்த தேர்வுகளின் மறுமதிப்பீட்டில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. தேர்வில் தோல்வி அடைந்த என்ஜினீயரிங் மாணவர்களும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து இருந்தனர்.

கடந்த ஆண்டு மே மாதம் மொத்தம் 3 லட்சத்து 2 ஆயிரத்து 380 என்ஜினீயரிங் மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து உள்ளனர். இதில் 16,636 மாணவர்கள் தேர்ச்சி பெற வைக்கப்பட்டு உள்ளனர். இந்த மாணவர்களை தேர்ச்சி பெறவைப்பதற்காக தலா ரூ.10 ஆயிரம் வரை பல்கலைக்கழக அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் லஞ்சமாக வாங்கியுள்ளனர்.

இந்த முறைகேட்டால், சொந்த முயற்சியால் படித்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். இந்த முறைகேடு குறித்து சில பேராசிரியர்கள் மீது சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுபோன்ற முறைகேடுகள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்திருக்கலாம்.

எனவே மறுமதிப்பீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக கைமாறியது குறித்து சி.பி.ஐ. விசாரித்தால் தான் முழுமையான முறைகேடும் வெளிச்சத்துக்கு வரும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினேன். இதுவரை பதில் இல்லை. எனவே அண்ணா பல்கலைக்கழக மறுமதிப்பீட்டு முறைகேட்டை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

மேலும் செய்திகள்