சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கடையடைப்பு–பஸ்கள் ஓடவில்லை; பயணிகள் தவிப்பு

கருணாநிதி மரணமடைந்ததை அடுத்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பஸ்கள் ஓடவில்லை. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

Update: 2018-08-07 22:15 GMT

சிவகங்கை,

முன்னாள் முதல்–அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி நேற்று காலமானார். அவரது மறைவையொட்டி நேற்று பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சிகள் சார்பில் மாலை முதல் கடையடைப்பு, வேலை நிறுத்தம் உள்ளிட்டவை நடைபெற்றன. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் காரைக்குடி மண்டல போக்குவரத்துக்கழகத்திற்கு உட்பட்டு 400–க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கருணாநிதி மறைவையொட்டி பெரும்பாலான பஸ்களும் அந்தந்த பணிமனைக்கு திருப்பிவிடப்பட்டன. இதனால் வேலை சென்றுவிட்டு ஊருக்கு செல்ல இருந்தவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இருப்பினும் அரசுத்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் நேற்றிரவு சில பஸ்கள் இயக்கப்பட்டன.

மேலும் சிவகங்கை, காரைக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டன. வெளியூர்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு பஸ்களும் நிறுத்தப்பட்டன. பஸ்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வெளியூர் செல்ல வேண்டிய பயணிகள் ரெயில் நிலையத்தில் குவிந்தனர். முன்பதிவு செய்யாத பெட்டிகளில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. இதேபோன்று கடைகள் அனைத்தும் மாலை 6 மணிக்கு மேல் அடைக்கப்பட்டன.

ராமேசுவரம் தீவு பகுதியை பொறுத்தமட்டில் அனைத்து கடைகளும் நேற்று மாலை அடைக்கப்பட்டன. மேலும் தீவில் இருந்து பஸ்கள் ராமநாதபுரம் உள்ளிட்ட வேறு பகுதிகளுக்கு செல்லவில்லை. நகரில் இருந்து இயக்கப்படும் அனைத்து விரைவு, டவுன் பஸ்கள் பணிமனையிலேயே நிறுத்திவைக்கப்பட்டன. இதனால் ராமேசுவரம் கோவில் மற்றும் தனுஷ்கோடி வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். அவர்கள் வெளியூர் செல்ல பஸ்கள் கிடைக்காததால் ரெயில் நிலையத்தில் குவிந்தனர். ஆனால் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் செய்வதறியாது தவித்தனர்.

கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்ய மெரினாவில் உள்ள அண்ணா சதுக்கத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனை கண்டித்து ராமேசுவரம் திட்டக்குடி பகுதியில் தி.மு.க.வினர் நகர செயலாளர் நாசர்கான் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராமேசுவரம் போலீசார், மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்