புதுவையில் கடைகள் அடைப்பு: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு தொடர்ந்து புதுவையில் நேற்று இரவு கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Update: 2018-08-07 23:15 GMT

புதுச்சேரி,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று மாலை மரணம் அடைந்தார். அவரது மறைவு பற்றிய தகவல் அறிந்த உடன் புதுவையில் உள்ள தனியார் நிறுவனங்கள், பெரும்பாலான கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டன. இதனால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் வீடு திரும்பினர்.

இதே போல் பொழுதுபோக்கிற்காகவும், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கவும் வெளியே சென்ற பொதுமக்கள் கருணாநிதியின் மறைவு செய்தி கேட்ட உடன் அவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். இதனால் புதுவையில் அண்ணாசாலை, நேருவீதி, புஸ்சிவீதி, காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலை உள்பட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவு காணப்பட்டது.

இதே போல் புதுவையில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன. ஒரு சில பெட்ரோல் பங்குகள் மட்டும் செயல்பட்டன. அதிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தங்கள் வண்டிகளுக்கு பெட்ரோல் நிரப்பி சென்றனர். பெரும்பாலானோர் பாட்டில்களை கைகளில் எடுத்து வந்து அதில் பெட்ரோல் வாங்கி சென்றனர்.

புதுவையில் உள்ள தியேட்டர்களில் நேற்று மாலை மற்றும் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இன்று(புதன்கிழமை) அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படும் என்று தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். புதுவையில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன.

புதுவையில் இருந்து நேற்று மாலை சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் புதுவை பஸ்நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் முண்டி அடித்துக்கொண்டு பஸ்களில் ஏறி இடம்பிடித்து பயணம் செய்தனர். பலர் பஸ்களின் நின்ற படியே சென்றனர். பெரும்பாலான மக்கள் ரெயில் மூலம் பயணம் செய்தனர். இதனால் புதுவை ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

புதுவைக்கு சுற்றுலா வந்த பொதுமக்கள் விடுதி அறையிலேயே முடங்கி கிடந்தனர். பெரும்பாலான ஓட்டல்கள் நேற்று இரவு மூடப்பட்டதால் அவர்கள் உணவு கிடைக்காமல் அவதி அடைந்தனர். புதுவையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் புதுவை முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவு பற்றிய தகவல் பரவியதும் மண்ணாடிப்பட்டு தொகுதி தி.மு.க.வினரும், மண்ணாடிப்பட்டு அருகே உள்ள தமிழக பகுதியான கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க.வினரும் திருக்கனூருக்கு திரண்டு வந்தனர். அங்கு திருக்கனூர் கடை வீதியில் திறந்திருந்த கடைகளை அடைக்கும்படி கடைக்காரர்களிடம் கூறினார்கள். அதைத் தொடர்ந்து கடை உரிமையாளர்கள் அவசரம் அவசரமாக தங்கள் கடைகளை அடைத்தனர்.

அந்த பகுதியில் திறந்திருந்த ஒரு சாராயக்கடையின் ஓலை தட்டியை பிரித்து எறிந்தனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த வழியாக வந்த லாரிகள் மற்றும் வாகனங்களை தடுத்ததால், லாரிகளின் டிரைவர்கள் தங்கள் லாரிகளை ரோடு ஓரமாக அப்படி அப்படியே நிறுத்திவிட்டனர். இதன் காரணமாக திருக்கனூர் கடை வீதியில் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்