போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: மாவட்டத்தில் ஆட்டோ, வேன்கள் ஓடவில்லை

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி கடலூர் மாவட்டத்தில் ஆட்டோ, வேன்கள் ஓடவில்லை. பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

Update: 2018-08-07 22:32 GMT
கடலூர்,


மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சுங்கக்கட்டணத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தினர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்திலும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு ஆட்டோ, வேன், வாடகை கார்கள் ஓட்டுனர்கள், உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதன்படி நேற்று கடலூரில் ஆட்டோக்கள் ஓடவில்லை. அவர்கள் தங்கள் வீடுகளில் ஆட்டோக்களை நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் ஆட்டோ நிறுத்துமிடம் வெறிச்சோடி காணப்பட்டது.

அதேபோல் கடலூரில் இருந்து புதுச்சேரி, அரசு மருத்துவமனை, கோண்டூர், கடலூர் முதுநகர் மார்க்கமாக செல்லும் ஷேர் ஆட்டோக்களும் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள் ஓடாததால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை இரு சக்கர வாகனங்களிலும், சொந்த கார்களிலும் ஏற்றிச்சென்றதை காண முடிந்தது. இதையொட்டி நகர முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை போக்குவரத்து போலீசார் சீரமைத்தனர். சுற்றுலா வேன்கள், கார்களும், லாரிகள், மினி லாரிகள் ஓடவில்லை. இதை அதன் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் அந்தந்த நிறுத்தங்களில் நிறுத்தி வைத்திருந்தனர். மேலும் வாகனங்களில் வேலை நிறுத்தம் குறித்த அறிவிப்பு நோட்டீசை ஒட்டி வைத்திருந்ததை காண முடிந்தது. இருப்பினும் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. டவுன் பஸ்கள், புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டன. கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் தனியார் பஸ்களை தவிர மற்ற அனைத்து இடங்களுக்கும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. அனைத்து பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது.

வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக வாகன பழுதுபார்ப்போர், உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகளும் முற்றிலும் அடைக்கப்பட்டு இருந்தன. பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் ஆட்டோ, வேன்கள் ஓடாததால் கடலூரில் உள்ள ஒருசில தனியார் பள்ளிகளுக்கு திடீரென விடுமுறை விடப்பட்டிருந்தது. பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, வேப்பூர், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் ஆட்டோ, கார், வேன்கள் ஓடவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்