தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம்: திருப்பூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு; பஸ்கள் ஓடவில்லை

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததால் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Update: 2018-08-07 23:00 GMT
திருப்பூர்,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ அறிக்கை நேற்று முன்தினம் மாலை வெளியானது. இதனால் 24 மணி நேரத்திற்கு பின்னரே அவரது உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் நேற்று மாலை 5 மணி அளவில் வெளியான மருத்துவ அறிக்கையில் கருணாநிதியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் மருத்துவமனை முன்பு தொண்டர்கள் கூட்டம் அதிகரித்தது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. திருப்பூரில் இருந்து சென்னைக்கு செல்லும் தனியார் பஸ்கள் நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டன. வெளியூர்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டன. அதே நேரம் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் காரணமாக பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

திருப்பூர் பழைய பஸ்நிலையம், புதிய பஸ் நிலையங்களுக்கு வந்த பஸ்கள் பயணிகளை இறக்கிவிட்டு பஸ்களை பணிமனைகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஒரு சில பஸ்கள் குறைந்த பயணிகளுடன் சென்றன. இதனால் பயணிகள் சிலர் கிடைத்த பஸ்களில் ஏறிச்சென்றனர். மேலும் பஸ் நிலையங்களில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டன.

திருப்பூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஏராளமான வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப குவிந்தனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதியது. எனவே அவர்கள் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல் நிரப்பிச்சென்றனர். இதுபோல் திருப்பூரில் உள்ள மார்க்கெட், காய்கறி கடைகள், மளிகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அவசரமாக வாங்கிச்சென்றனர்.

டாஸ்மாக் கடைகளை மாலை 6 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டது. இதனால் முன்னதாகவே டாஸ்மாக் கடைகள், பார்களில் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. பின்னர் மாலை 6 மணி அளவில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

இந்த நிலையில் மாலை 6.10 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து திருப்பூரில் அனைத்து கடைகள், மார்க்கெட் பகுதிகளில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டன. தி.மு.க. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. இதுபோல் திருப்பூரில் உள்ள நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், காதர்பேட்டையில் உள்ள பனியன் விற்பனை கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இது தவிர உடுமலை, வெள்ளகோவில், அவினாசி, காங்கேயம், தாராபுரம் உள்பட மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. மருந்துக்கடைகள் மட்டும் செயல்பட்டன. திருப்பூர் தாராபுரம் ரோடு, யூனியன் மில் ரோடு, பி.என்.ரோடு உள்ளிட்ட இடங்களில் இருந்த பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன.

ஏ.டி.எம். மையங்களில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று பணத்தை எடுத்தனர். ஒரு சில ஏ.டி.எம். மையங்களில் பணம் தீர்ந்ததால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். திருப்பூரில் பஸ் நிலையங்களில் பஸ்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன. பயணிகள் சிலர் ஆங்காங்கே இயக்கப்பட்ட ஒரு சில ஆட்டோக்களில் ஏறிச்சென்றனர். சிலர் நடந்தே சென்றனர். இதற்கிடையில் திருப்பூரில் உள்ள போக்குவரத்துகழக பணிமனை முன்பு எல்.பி.எப். சார்பில் கருணாநிதி உருவப்படம் வைத்து மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செய்யப்பட்டன.

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முக்கிய சந்திப்புகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் ஆயுதப்படை போலீசார் வாகனங்களில் ரோந்து சுற்றி கண்காணித்து வந்தனர். திருப்பூர் மாநகரில் மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரன் தலைமையில் 500 போலீசாரும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி தலைமையில் மாவட்டம் முழுவதும் 1,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்