காவேரி ஆஸ்பத்திரி முன்பு தி.மு.க. தொண்டர்கள் திடீர் போராட்டம்

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று காவேரி ஆஸ்பத்திரி முன்பு தி.மு.க. தொண்டர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Update: 2018-08-07 23:36 GMT
சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நல குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருடைய உடலை மெரினா கடற்கரையோரம் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

ஆனால் அங்கு இடம் ஒதுக்க முடியாது என்றும், கிண்டி காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கப்படுவதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில் மீண்டும் மு.க.ஸ்டாலின், மெரினாவில் இடம் ஒதுக்கக்கோரி கடிதம் எழுதினார்.

மெரினாவில் இடம் ஒதுக்காததை கண்டித்து தி.மு.க. தொண்டர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று மாலையில் இருந்தே போராட்டம் நடத்தினார்கள்.

நேற்று இரவு 8.30 மணியளவில் காவேரி ஆஸ்பத்திரி முன்பு குவிந்திருந்த தொண்டர்கள் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டம் நடத்தினார்கள். அப்போது காவேரி ஆஸ்பத்திரி முன்பு வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பு வேலிகளை தூக்கி எறிந்து தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

போலீசார் அவர்களிடம் பேச முயற்சித்த போது, வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் லேசான தடியடி நடத்தினார்கள். நாலாபுறமும் தி.மு.க. தொண்டர்கள் சிதறி ஓடினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கருணாநிதி இறந்ததை தொடர்ந்தும், அவரது உடலை அடக்கம் செய்ய மெரினாவில் தமிழக அரசு இடம் கொடுக் காததை கண்டித்தும் பெரவள்ளூர் அகரம் சந்திப்பில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் புளியந்தோப்பு, ஓட்டேரி, பெரவள்ளூர், திரு.வி.க. நகர் பகுதிகளில் கடையை அடைக்குமாறு தி.மு.க.வினர் எச்சரித்தனர். பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்ட நிலையில் தள்ளுவண்டியில் விற்பனை செய்தவர்கள், நடைபாதை வியாபாரிகள் மட்டும் அஞ்சி, அஞ்சி வியாபாரம் செய்தனர்.

இதனிடையே பெரம்பூர் முரசொலி பூங்கா வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் தீயிட்டு எரித்தனர்.

செங்குன்றத்தில் இருந்து ஆவடி நோக்கி நேற்று மாலை மாநகர அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. ஆவடியை அடுத்த வெள்ளானூர் அருகே பஸ் வந்தபோது மர்ம நபர்கள் பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கல்லை வீசி விட்டு ஓடி விட்டனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இது குறித்து பஸ் டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்