ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவி செய்வது போல் நூதன முறையில் மோசடி

ஆற்காட்டில் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவி செய்வது போன்று நடித்து நூதன முறையில் மோசடி செய்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Update: 2018-08-08 00:16 GMT
ஆற்காடு, 



ஆற்காட்டில் ஜீவானந்தம் சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியும், அதன் அருகில் ஏ.டி.எம். மையமும் இயங்கி வருகிறது. இந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க தெரியாதவர்களிடம் பணம் எடுத்துத் தருவதாக கூறி சிலர் மோசடி செய்து வருவதாக புகார்கள் வந்தது.

நேற்று மாலை இந்த ஏ.டி.எம். மையத்தில் சிலர் பணம் எடுக்க வந்திருந்தனர். அவர்களில் பணம் எடுக்க தெரியாத வாடிக்கையாளர்களிடம் அங்கு நின்றிருந்த 3 பேர் நாங்கள் பணம் எடுத்து தருகிறோம் என கூறி ஏ.டி.எம். கார்டை பெற்று எந்திரத்தில் செலுத்தி, ரகசிய எண்ணை தெரிந்துகொண்டு இந்த கணக்கில் பணம் இல்லை எனவும், ஏ.டி.எம். கார்டு லாக் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறி ஏ.டி.எம். கார்டை கொடுத்து அனுப்பி உள்ளனர்.
பின்னர் அருகிலுள்ள எந்திரத்தில் மர்ம நபர்கள் தாங்கள் வைத்துள்ள ஏ.டி.எம். கார்டை வைத்து வாடிக்கையாளர்களின் கணக்கில் உள்ள பணத்தை நூதன முறையில் எடுத்துள்ளனர். இதை கவனித்த ஏ.டி.எம். மைய காவலாளி அறிவழகன் அந்த நபர்களிடம் ஏ.டி.எம்.மையத்தில் என்ன செய்கிறீர்கள் என கேட்டுள்ளார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது ஏ.டி.எம். எந்திரத்தில் ‘ஜிஸ்கிம்மா’ என்ற எந்திரத்தை பொருத்தப்பட்டுள்ளது தெரிய வந்தது.

காவலாளி அறிவழகன் அந்த ‘ஜிஸ்கிம்மா’ எந்திரத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். அப்போது ஏ.டி.எம். மையத்திற்கு வெளியே நின்றிருந்த 2 நபர்கள் லேப்டாப், செல்போன் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தில் செலுத்தப்படும் ஏ.டி.எம்.கார்டுகளில் உள்ள தகவல்களை சேகரித்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் அந்த 3 பேரையும் மடக்கி பிடிக்க முயற்சித்தனர். இதில் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். ஒருவரை மட்டும் பிடித்து ஆற்காடு டவுன் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பிடிபட்ட நபர் ஜார்கண்ட் மாநிலம், தன்பாத் மாவட்டத்தை சேர்ந்த ஜகாங்கீர் (வயது26) என்பதும், இவர் பல்வேறு ஏ.டி.எம் மையங்களில் நூதன முறையில் பணம் திருடியதும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பி ஓடியவர்கள் குறித்தும், இதுபோன்று வேறு எங்காவது மோசடி செய்துள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்