தமிழகத்தில் ஊழல் இல்லாத கட்சியுடன் கூட்டணி பா.ஜனதா மாநில செயலாளர் ராகவன் பேட்டி

தமிழகத்தில் ஊழல் இல்லாத கட்சியுடன் தான் கூட்டணி என்று தென்காசியில் பா.ஜனதா மாநில செயலாளர் ராகவன் கூறினார்.

Update: 2018-08-08 08:32 GMT
தென்காசி,

தமிழகத்தில் ஊழல் இல்லாத கட்சியுடன் தான் கூட்டணி என்று தென்காசியில் பா.ஜனதா மாநில செயலாளர் ராகவன் கூறினார்.

பேட்டி

பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் கே.டி.ராகவன் நேற்று தென்காசி வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த மாதம் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வந்தபோது பூத் பொறுப்பாளர்களை சந்தித்தார். சுமார் 15 ஆயிரம் பேர் இதில் கலந்து கொண்டனர். இதில் பா.ஜ.க.வில் உள் கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இன்னும் 3 மாதத்திற்குள் பூத் அளவிலான திட்டங்களை வரையறுக்க கூறப்பட்டது. இதற்காக மாநில நிர்வாகிகளை கொண்ட 20 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த குழுக்கள் பாராளுமன்ற தொகுதிகள் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தலுக்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை ஆலோசனை நடத்துகின்றன. அதற்காக இங்கு வந்துள்ளோம்.

தமிழகத்தில் ஊழல் இல்லாத கட்சியுடன் தான் கூட்டணி என்று பா.ஜனதா முடிவு செய்துள்ளது. அது யார் என்பது இன்னும் 3 மாதங்களில் தெரியும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை கோவில்களில் அர்ச்சர்களாக நியமிப்பது குறித்து தி.க. தலைவர் வீரமணி கருத்து கூறியுள்ளார். இதிகாசங்களை நன்கு தெரியாமல் சிலர் பேசி வருகிறார்கள்.

சிலை கடத்தல்

சிலை கடத்தல் வழக்கு நல்ல விசாரணையில் நடைபெற்று வரும் சூழலில் அரசு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது ஏன்? என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். யாரை காப்பாற்ற இவ்வாறு செய்கிறார்கள்.

சிலைகளுக்கு பாதுகாப்பு அறை வேண்டும் என்று கூறிய போது தமிழக அரசு ஏன் மவுனம் காட்டுகிறது?. அரசின் இந்த செயல்பாடு அறநிலைய துறையில் பல லட்சம் கோடி ஊழல் நடைபெற்றிருக்குமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் சாதனைகளை கூறி வாக்குகள் கேட்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பா.ஜ.க. மாநில ஊடக பிரிவு தலைவர் பிரசாத், தேசிய குழு உறுப்பினர் அன்புராஜ், நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் குமரேச சீனிவாசன், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் ராஜா, நகர தலைவர் திருநாவுக்கரசு, செந்தூர் பாண்டியன் மற்றும் பல நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்