புதுக்கோட்டை மாவட்ட பல்வேறு பகுதிகளில் கருணாநிதி மறைவுக்கு பொதுமக்கள் அஞ்சலி

புதுக்கோட்டை மாவட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க. தலைவர் கருணாநிதி உருவப்படத்திற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2018-08-08 22:45 GMT
கீரமங்கலம்,

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி கீரமங்கலம், கொத்தமங்கலம், கைகாட்டி வடகாடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கடைவீதிகளில் அவரது உருவப்படத்திற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மாலையில் அனைத்து பகுதிகளிலும் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. கீரமங்கலத்தில் நகர செயலாளர் சிவக்குமார் தலைமையிலும், முன்னாள் ஒன்றிய செயலாளர் தமிழரசன் முன்னிலையிலும் மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. அதேபோல சுற்றுவட்டார கிராமங்களிலும் மவுன ஊர்வலம் மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தன.

கந்தர்வகோட்டை ஒன்றிய, நகர தி.மு.க. சார்பாக நகர செயலாளர் ராஜா தலைமையில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பாக அமைதி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து காந்திசிலையின் முன்பாக அனைத்து கட்சிகளின் சார்பாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இதேபோல ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குக்கிராமங்களிலும் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோன்று ஆதனக்கோட்டை, பெருங்களுர் பகுதிகளிலும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களிலும் பொதுமக்கள் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆலங்குடியில் தி.மு.க. மற்றும் அனைத்து கட்சியினர் காமராஜர் சிலையில் இருந்து ஊர்வலமாக சந்தைபேட்டைக்கு வந்தனர். பின்னர் அங்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.. இதேபோல கோட்டைப்பட்டினம், மீமிசலில் தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம் நடத்தினர். இலுப்பூரில் நகர செயலாளர் விஜயக்குமார் தலைமையிலும், அன்னவாசலில் நகர செயலாளர் அக்பர் அலி தலைமையிலும் தி.மு.க.வினர் கருணாநிதி உருவப்படத்தை கையில் ஏந்தி கொண்டு அமைதி ஊர்வலம் நடத்தினர். இதில் தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விராலிமலை கிழக்கு ஒன்றியம் மாத்தூரில் நேற்று காலை பந்தல் அமைத்து தி.மு.க. தலைவர் கருணாநிதி உருவப்படத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் மாலையில் தி.மு.க. ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் மாத்தூர் அய்யாவு தலைமையில் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட அமைதி ஊர்வலம் நடந்தது. இதேபோல ஆவூர் அருகே உள்ள ஆம்பூர்பட்டியில் தி.மு.க.வினர் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாலையில் கருணாநிதி உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்து சென்று ஊரணிக்கரையில் அடக்கம் செய்தனர். இதேபோல ஆவூர், மலம்பட்டி, நீர்பழனி,மேலபச்சகுடி, குன்னத்தூர் மண்டையூர், விளாப்பட்டி, பேராம்பூர், ஆலங்குளம், பாலாண்டாம்பட்டி, லெட்சுமணன்பட்டி உள்பட அனைத்து ஊராட்சி மற்றும் கிராம பகுதிகளில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

மேலும் செய்திகள்