கருணாநிதி மறைவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் கடையடைப்பு-பஸ்கள் ஓடவில்லை

கருணாநிதி மறைவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ்கள் ஓடவில்லை.

Update: 2018-08-08 22:45 GMT
புதுக்கோட்டை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் நேற்று முன்தினம் இரவு நீண்டநேரம் பயணிகள் பஸ் நிலையத்தில் காத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் பயணிகளை அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஏற்றி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக அரசு பஸ்கள் அனைத்தும் போக்குவரத்து கழக பணிமனையில் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் நேற்று மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, அறந்தாங்கி, கீரனூர், கறம்பக்குடி, ஆலங்குடி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், பொன்னமராவதி, காரையூர், இலுப்பூர், அன்னவாசல், விராலிமலை, வடகாடு, கீரமங்கலம், அரிமளம், திருமயம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

மேலும் புதுக்கோட்டை நகரில் உள்ள கீழராஜவீதி, மேலராஜவீதி, தெற்குராஜவீதி, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல சரக்கு வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பஸ்கள் இயக்கப்படாமலும், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டும் இருந்தது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும் திரையங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. தொடர்நது அனைத்து பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்