கருணாநிதி மறைவு: மதுரை வெறிச்சோடியது

எப்போதும் பரபரப்பாக காணப்படும் மதுரை பெரியார் பஸ் நிலையம், மாட்டுத்தாவணி பஸ்நிலைய பகுதிகள் கருணாநிதி மறைவையொட்டி மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

Update: 2018-08-08 22:15 GMT

மதுரை,

மதுரையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பெரியார் பஸ் நிலையம், மாட்டுத்தாவணி பஸ்நிலைய பகுதிகள் கருணாநிதி மறைவையொட்டி மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. நகரில் உள்ள கடைகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் வெளியூரில் இருந்து வந்தவர்கள் தாங்கள் செல்லும் பகுதிக்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். ஆட்டோக்கள், மினி பஸ்கள் ஓடவில்லை. பெட்ரோல் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பரப்பாக இயங்கும் சாலைகள் எவ்வித போக்குவரத்தும் இல்லாமல் வெறிச்சோடி இருந்தன. தியேட்டர்களில் படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

வாகன போக்குவரத்து முற்றிலும் இல்லாததால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. நகரில் ஆங்காங்கே கருணாநிதி படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினர். வீதியெங்கும் ஒலிப்பெருக்கி அமைத்து கருணாநிதியின் கொள்கை பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. 100–க்கும் மேற்பட்ட தி.மு.க. தொண்டர்கள் மொட்டை அடைத்து கருணாநிதிக்கு தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்தினர். பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் மவுன ஊர்வலம் நடத்தினர். நகரின் பல தெருக்களில் பெரிய எல்.இ.டி. டி.வி.க்களை வைத்து கருணாநிதியின் இறுதி ஊர்வலக் காட்சிகளை பார்த்தனர். அதனை பெரிய ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பவும் செய்தனர்.

மேலும் செய்திகள்