போளூரில் 3 அரசு பஸ்கள் கண்ணாடி உடைப்பு

கருணாநிதி மறைவையொட்டி போளூரில் 3 அரசு பஸ்கள் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-08-08 22:00 GMT
போளூர்,



தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவையொட்டி போளூரில் நேற்று முன்தினம் இரவு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து சிலர் மோட்டார் சைக்கிள்களில் நகரை சுற்றி வந்து கடைகள் திறந்திருக்கிறதா? என பார்வையிட்டனர்.

போளூருக்கு ஆரணியில் இருந்து வந்த அரசு பஸ், சென்னையில் இருந்து போளூர் நோக்கி வந்த அரசு பஸ், வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ் ஆகிய 3 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இது குறித்து அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் சீனிவாசன் போளூர் போலீசில் புகார் செய்தார்.
போளூர் பணிமனையில் உள்ள 43 அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. இதனால் நேற்று காலை பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. வெளியூர் செல்லும் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ் தலைமையில் போலீசார் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று காலை தி.மு.க.வினர் மவுன ஊர்வலமாக சென்று பஸ் நிலையம் அருகே அலங்கரிக்கப்பட்ட பந்தலில் வைக்கப்பட்ட முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து தி.மு.க.வினர் ஏராளமானோர் வேன், கார்களில் சென்னைக்கு இறுதி அஞ்சலி செலுத்த பயணம் செய்தனர். 

மேலும் செய்திகள்