போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் 7 மாதத்தில் ரூ.1 கோடியே 43 லட்சம் அபராதம் வசூல்

வேலூர் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து 1 கோடியே 43 லட்சத்து 53 ஆயிரத்து 192 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது. 12 ஆயிரத்து 676 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-08-08 22:00 GMT
வேலூர்,


வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள 8 போலீஸ் உட்கோட்டங்களின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துப் போலீசார் மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் முதல், ஜூலை மாதம் வரை 7 மாதங்களில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 2,119 பேர் மீதும், ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய 35 ஆயிரத்து 665 பேர் மீதும், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டிய 725 பேர் மீதும், ‘ஷீட் பெல்ட்’ அணியாமல் கார் ஓட்டிய 8 ஆயிரத்து 324 பேர் மீதும், செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டிய 14 ஆயிரத்து 310 பேர் மீதும், அதிகபாரம் ஏற்றிய 1,109 வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதேபோல் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள், சீருடை அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள், அதிக உயரத்தில் பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள், மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணித்தவர்கள், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியவர்கள் உள்பட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 834 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதன் மூலம் வாகன ஓட்டிகளிடம் இருந்து 1 கோடியே 43 லட்சத்து 53 ஆயிரத்து 192 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.

மேலும் கடந்த 7 மாதங்களில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய மற்றும் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றது, சாலையில் வாகனங்களை தாறுமாறாக ஓட்டிச் சென்றது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 16 ஆயிரத்து 760 பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

அதன்பேரில் 12 ஆயிரத்து 676 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது எனப் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்