குமாரசாமி முதல்-மந்திரி ஆனதையொட்டி கோழிகள், ஆடுகளை பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய ஆதரவாளர்

குமாரசாமி முதல்-மந்திரி ஆனதையொட்டி கோழிகள், ஆடுகளை பலி கொடுத்து அவரது ஆதரவாளர் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளார்.

Update: 2018-08-08 22:45 GMT
மண்டியா,

மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா முருகனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குள்ளேகவுடா. முன்னாள் தாலுகா பஞ்சாயத்து தலைவரான இவர் முதல்-மந்திரி குமாரசாமியின் தீவிர ஆதரவாளர் ஆவார். இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மண்டியா மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் கோழிகள், ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதாக அப்பகுதியில் உள்ள தோரம்மா கோவிலில் குள்ளேகவுடா வேண்டி இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் தேர்தலில் தற்போது மாநிலத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியுள்ளன. மேலும் முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி வகித்து வருகிறார். மண்டியா மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் குள்ளேகவுடா, தனது வேண்டுதலை நிறைவேற்ற முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் தோரம்மா கோவிலுக்கு 151 கோழிகள், 2 ஆடுகளை வாங்கி கொண்டு நேர்த்திக்கடன் செலுத்த குள்ளேகவுடா வந்தார். அவருடன் அவரது உறவினர்களும் வந்து இருந்தார்கள்.

இதனை தொடர்ந்து தோரம்மாவுக்கு 151 கோழிகள், 2 ஆடுகளை பலி கொடுத்து குள்ளேகவுடா தனது வேண்டுதலை நிறைவேற்றி கொண்டார். மேலும் உறவினர்களும், சுற்றுவட்டார கிராம மக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர். இதுகுறித்து குள்ளேகவுடா கூறும்போது, ஜனதாதளம்(எஸ்) ஆட்சிக்கு வந்தால் கோழி, ஆடுகளை பலி கொடுத்து தோரம்மாவுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டி இருந்தேன். அதன்படி எனது வேண்டுதலை தோரம்மாவும் நிறைவேற்றி உள்ளார். அதன்படி அவருக்கு நேர்த்திக் கடன் செலுத்தி உள்ளேன். முதல்-மந்திரியாக குமாரசாமி பொறுப்பு ஏற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்