சுதந்திர தினவிழாவை சீர்குலைக்க சதியா? பெங்களூருவில் பதுங்கி இருந்த மற்றொரு பயங்கரவாதி கைது

பெங்களூருவில் பதுங்கி இருந்த மற்றொரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஜமாத்-உல்-முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. சுதந்திர தினவிழாவை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டினாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2018-08-08 22:30 GMT
பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ராமநகர் புறநகரில் பதுங்கி இருந்த பயங்கரவாதி முகமது ஜகிதுல் இஸ்லாம் என்ற முனீர் சேக் என்பவரை தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கடந்த 6-ந் தேதி கைது செய்தார்கள். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், ஜமாத்-உல்-முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்பதும், 2013-ம் ஆண்டு புத்த கயாவில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் ஜமாத்-உல்-முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த சிலர் பெங்களூருவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், பெங்களூரு கன்டோண்மென்ட் ரெயில் நிலையம் அருகே வைத்து மற்றொரு பயங்கரவாதியை தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், அவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அஸ்னாத்துல்லா(வயது 29) என்பதும், பெங்களூரு சிவாஜிநகர் அருகே பதுங்கி இருந்து வந்ததும் தெரிந்தது. அவருக்கு ஜமாத்-உல்-முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. பயங்கரவாதி அஸ்னாத்துல்லாவிடம் இருந்து 3 செல்போன்கள், பல்வேறு வங்கிகளுக்கு பண பரிமாற்றம் செய்ததற்கான ரசீதுகள், ஒரு குறிப்பேடு உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு இருக்கிறது. அதனை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஏற்கனவே கைதான முகமது ஜகிதுல் இஸ்லாம் கொடுத்த தகவலின் பேரில் அஸ்னாத்துல்லா சிக்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூருவில் சுதந்திர தினவிழாவை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டினாரா? என்பது குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெங்களூருவில் பயங்கரவாதி கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்