திருப்பூர் மாநகரில் பின்னலாடை நிறுவனங்கள் செயல்படவில்லை

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் நேற்று செயல்படவில்லை.

Update: 2018-08-08 21:55 GMT
திருப்பூர், 


தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பின்னலாடை தொழில் துறையினர் நேற்று ஒருநாள் பின்னலாடை நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்திருந்தனர். இதனால் நேற்று காலை திருப்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் செயல்படவில்லை. இதனால் இந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை.

பின்னலாடை நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் தொழிலாளர்கள் தாங்கள் தங்கியிருக்கும் அறை, வீடுகளிலேயே முடங்கினார்கள். இதன்காரணமாக வாகன நெரிசலுடன் எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருப்பூர் ரோடுகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

அதுபோல் திருப்பூர் மாநகரில் பனியன் நிறுவனங்கள் அமைந்துள்ள வீதிகளில் உள்ள டீக்கடை, பேக்கரி, உணவகங்கள் முன்பு தொழிலாளர்கள் நிறைந்து காணப்படுவார்கள். நேற்று பனியன் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் தொழிலாளர்கள் வரவில்லை. அதுபோல் டீக்கடை, பேக்கரி, உணவகங்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டதால் வீதிகள் வெறிச்சோடி அமைதியாக காணப்பட்டன.

பின்னலாடை நிறுவனங்களில் இருந்து சரக்குகளை கொண்டு செல்லும் வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் பிரதான ரோடுகளில் வாகன போக்குவரத்து மிகவும் குறைவாக காணப்பட்டன. பெரிய, பெரிய பின்னலாடை நிறுவனங்களில் வாகனங்கள் மூலம் வெளியூரில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருவது வழக்கம். நேற்று அந்த வாகனங்கள் அனைத்தும் பனியன் நிறுவன வளாகங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. 

மேலும் செய்திகள்