தாத்தாவை ஹஜ் பயணத்துக்கு வழியனுப்ப வந்த 2 வயது குழந்தை 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி

சென்னை சூளையில், தாத்தாவை ஹஜ் பயணத்துக்கு வழியனுப்ப வந்த 2 வயது குழந்தை 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தது.

Update: 2018-08-09 22:30 GMT
திரு.வி.க.நகர்,

சென்னை சூளை, டிமலஸ் சாலையில் தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி கட்டிடம் உள்ளது. ஹஜ் புனித பயணம் மேற்கொள்வதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்துவரும் இஸ்லாமியர்கள் இங்கு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளும் இங்கு செய்யப்பட்டு வருகிறது.

நேற்று மதியம் 12.30 மணியளவில் இந்த கட்டிடத்தின் 3-வது மாடியில் உள்ள அறையில் இருந்த பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை தவறி கீழே விழுந்தது. உடனே அங்கிருந்தவர்கள் குழந்தையை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் குழந்தை அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டது. மூளை செயல்பாடு முற்றிலும் இழந்த நிலையில் அந்த குழந்தை சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த பேசின்பிரிட்ஜ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகுல் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கர்நாடகா மாநிலம் தார்வாட மாவட்டம் நியூ உப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மோசின் (வயது 26). இவரது மனைவி ருக்சார் (22), மகன்கள் ஓமின் (4), அப்துல்லா (2). மோசின் அங்குள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார். ருக்சாரின் தந்தை அல்லோபாக்ஸ் என்பவர் ஹஜ் புனித பயணம் செல்கிறார். அவரை வழியனுப்புவதற்காக இவர்கள் அனைவரும் கடந்த 7-ந்தேதி சென்னை வந்து இந்த கட்டிடத்தின் 3-வது மாடியில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்தனர்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அல்லோபாக்சை நேற்று காலை வழியனுப்பிவிட்டு தங்களது அறைக்கு திரும்பி வந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் ரெயில் மூலம் கர்நாடகம் திரும்பிச் செல்ல இருந்தனர். இந்நிலையில் அறையின் பால்கனியில் இருந்த நாற்காலியில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அப்துல்லா தவறி விழுந்துவிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

அந்த குழந்தை காது கேட்காத, வாய் பேசமுடியாத நிலையில் இருந்ததாக அவரது தாயார் தெரிவித்தார். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்