மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது கலெக்டர் தகவல்

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று (வெள்ளிக் கிழமை) குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.

Update: 2018-08-09 22:30 GMT
கரூர்,

தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையின் சார்பாக இன்று (வெள்ளிக்கிழமை) தேசிய குடற்புழு நீக்க தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி வழங்கப்படும் குடற்புழு நீக்க மருந்து, மாத்திரை சாப்பிடுவதன் மூலம் குழந்தைகள் ஆரோக்கியமாக நன்கு வளர முடியும். கரூர் மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக குடற்புழு நீக்க மருந்து, மாத்திரை 1 வயது முதல் 19 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு அங்கன்வாடிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி கல்லூரிகள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இதன் மூலம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ மற்றும் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும். குறிப்பாக, ரத்த சோகை குறைபாடு வராமல் தடுக்க முடியும். குடற்புழு தாக்கத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாணவ- மாணவிகளின் பள்ளி வருகை பாதிக்கப்படாமல் தவிர்க்கப்படும். இதனால் மாணவ-மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதோடு விளையாட்டு போன்ற இதர நடவடிக்கைகளிலும் அதிக ஊக்கம் மற்றும் புத்துணர்வுடன் பங்கேற்க ஏதுவாகும். பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளர்களின் மூலமாக அங்கன்வாடி மையத்திற்கு அழைத்து வந்து குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட உள்ளது. மேலும் ஊட்டச்சத்து குறைபாடு, ரத்தசோகை, உடல் வளர்ச்சி குன்றுதல், எடை குறைவு உள்ளிட்ட குறைபாடுகள் இந்த மருந்து உட்கொள்வதன் மூலம் வராமல் தடுக்கப்படுகிறது. எனவே 1 வயது முதல் 19 வயதிற்கு உட்பட்ட அனைவரும் தவறாது இந்த மருந்தை உட்கொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்