அரசு பஸ்சுக்கு தீ வைக்க முயன்ற தி.மு.க.வினர் 4 பேர் கைது

வடமதுரை அருகே அரசு பஸ்சுக்கு தீ வைக்க முயன்ற தி.மு.க.வை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-08-09 21:45 GMT
வடமதுரை, 


சென்னையில் இருந்து தேனி மாவட்டம், கம்பத்துக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் ஒன்று கடந்த 7-ந்தேதி இரவு புறப்பட்டது. அந்த பஸ்சை திருவள்ளூர் மாவட்டம், ஈக்காடு பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் (வயது 55) என்பவர் ஓட்டினார். பஸ்சில் 44 பயணிகள் இருந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த மூணாண்டிபட்டி என்னுமிடத்தில் பஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென பஸ்சை மறித்தனர். எங்கள் தலைவர் இறந்து விட்டார், நீங்கள் எப்படி பஸ்சை ஓட்டலாம் என்று பயணிகள் அனைவரையும் கீழே இறங்கும்படி மிரட்டல் விடுத்தனர். பயணிகள் அலறியடித்து கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்கினர். இதைத்தொடர்ந்து அவர்கள் கொண்டு வந்த கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து பஸ்சின் சக்கரத்தில் ஊற்றி தீ வைக்க முயன்றனர்.

இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்து தடுத்து அவர்களை பிடிக்க முயன்றனர். உடனே அவர்கள் காரில் ஏறி தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து பஸ் டிரைவர் ஜெய்சங்கர் வடமதுரை போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தி.மு.க.வை சேர்ந்த வடமதுரை ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் கர்ணன் (55), அவருடைய ஆதரவாளர்களான முத்தனாங்கோட்டையை சேர்ந்த கருப்பையா (25), முருகன் (44), தங்கராஜ் (38), வெள்ளபொம்மன்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (37) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பையா உள்பட 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கர்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்