ஸ்டவ் அடுப்பு வெடித்து விபத்து: உடல் கருகிய தம்பதிக்கு தீவிர சிகிச்சை

வடமதுரை அருகே, ஸ்டவ் அடுப்பு வெடித்ததில் உடல் கருகிய தம்பதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் தீக்காயம் அடைந்த அவர்களுடைய மகனும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.

Update: 2018-08-09 22:00 GMT
திண்டுக்கல், 


வடமதுரை அருகே உள்ள செங்குளத்துப்பட்டியை சேர்ந்த தொந்தி மகன் காளஸ்வரன் (வயது 25). கூலித்தொழிலாளியான இவருக்கு, நாகஜோதி (24) என்ற மனைவியும் நந்தகுமார் (3) என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில், நாகஜோதி புதிதாக மண்எண்ணெய் ஸ்டவ் அடுப்பு வாங்கி வீட்டில் வைத்து இருந்தார். அதில், நேற்று காலை மண்எண்ணெய் ஊற்றினார்.

அப்போது, சிறிதளவு மண்எண்ணெய் ஸ்டவ் அடுப்பின் மற்ற பகுதியிலும், தரையிலும் சிந்தி இருந்தது. இதனை கவனிக்காத நாகஜோதி அடுப்பை பற்ற வைத்தார். இதனால், சிந்தி இருந்த மண்எண்ணெய் முழுவதும் தீப்பிடித்ததால் எதிர்பாராதவிதமாக அடுப்பு வெடித்து சிதறியது. இதில் நாகஜோதி உடல் முழுவதும் தீப்பிடித்ததால் அவர் அலறினார்.

இதைப்பார்த்து ஓடி வந்த காளஸ்வரன் மனைவியை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் தீப்பற்றியது. அருகே இருந்த நந்தகுமாருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இவர்களது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அதில், 3 பேரையும் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவன்-மனைவி இருவருக்கும் 80 சதவீதத்துக்கும் மேல் உடல் கருகியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு வந்து காளஸ்வரன், நாகஜோதி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். மேலும், திண்டுக்கல் 2-வது மாஜிஸ்திரேட்டு பாலமுருகனும் நேரில் வந்து இருவரிடமும் வாக்குமூலம் பெற்றார்.

எதிர்பாராதவிதமாக ஸ்டவ் அடுப்பு வெடித்து கணவன்- மனைவி உடல் கருகிய சம்பவம் வடமதுரை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்