சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பெறும் வசதி அறிமுகம் கலெக்டர் தகவல்

வருவாய்த்துறை சான்றிதழ் களை ஆன்லைன் மூலம் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-09 21:45 GMT
திண்டுக்கல், 


திண்டுக்கல் மாவட்டத்தில் அரசின் சேவைகளை பொதுமக்கள் சிரமமின்றி விரைவாக பெறும்வகையில் மின் மாவட்ட திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் வருமானம், சாதி, இருப்பிடம், முதல் பட்டதாரி சான்றிதழ், கணவரால் கை விடப்பட்டோர் சான்றிதழ், சமூகநலத்துறையின் மூலம் வழங்கப்படும் திருமணநிதி உதவி திட்டங்கள் மற்றும் இணையவழி பட்டா மாறுதல் களும் மின் மாவட்ட திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

மேலும், 15 வருவாய்த்துறை சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாரிசு சான்றிதழ், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ், சொத்து மதிப்பு, அடகு பிடிப்போர் உரிமம், பணம் கொடுப்போர் உரிமம், பள்ளி கல்வி சான்றிதழ்கள் தொலைந்தமைக்கான சான்றிதழ், ஆண் குழந்தை இன்மை என்பதற்கான சான்றிதழ், விதவை, திருமணமாகாதவர் என்பதற் கான சான்றிதழ், கலப்பு திருமணச் சான்றிதழ், குடும்ப இடப்பெயர்ச்சி சான்றிதழ், வேலையில்லாதவர் என்பதற் கான சான்றிதழ், விவசாய வருமான சான்றிதழ், குடியிருப்புச் சான்றிதழ் ஆகிய சான்றிதழ் களை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட சான்றிதழ்களை பெறுவதற்கு https :// www.tnesevai.tn.gov.in/citizen / என்ற இணையதள முகவரியில் தங்களுக்கென்று பயனாளர் கணக்கை ஆன்லைன் மூலம் ஏற்படுத்தி கொண்டு தாங்களே நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் ஏற்கப்பட்டு சான்றிதழ் தயாரானதும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்படும். குறுஞ்செய்தி பெறப்பட்டவுடன் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UMANG என்னும் ஆன்ராய்டு செயலி மூலமாகவும் பொதுமக்கள் வருமானம், சாதி, இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றை தங்கள் செல்போன் மூலமாக விண்ணப்பித்து பெறலாம். இதற்கான சேவைக்கட்டணமாக ரூ.60-ஐ இணையதள வங்கி முறை அல்லது கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமாக செலுத்தி பயன்பெறலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் அவர் கள் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்