ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை தர்மபுரி கலெக்டர் உத்தரவு

காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-08-09 22:45 GMT
தர்மபுரி,

கேரளா மற்றும் கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன்காரணமாக உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு திறக்கப்பட்ட 1 லட்சம் கனஅடி தண்ணீர் இன்று(வெள்ளிக்கிழமை) தமிழக எல்லையான ஒகேனக்கல்லுக்கு வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாய நிலைஏற்பட்டு உள்ளது.

காவிரி ஆற்றில் இந்நீர்வரத்து படிப்படியாக உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. இதேபோல் பரிசல் இயக்கவும் தடை செய்யப்படுகிறது. இந்த தடையானது நீர்வரத்து குறைந்து மறுஉத்தரவு வரும் வரை நீடிக்கும். நீர்வரத்து அதிகரித்து வரும் காரணத்தால் ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருவதை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தவிர்க்குமாறும் கேட்டுகொள்ளப்படுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதால் வருவாய்த்துறை, காவல்துறை, வனத்துறை மற்றும் தீயணைப்பு மீட்புப்பணித்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்