ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு போலீசார் விசாரணை

தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-08-09 22:15 GMT
தேன்கனிக்கோட்டை,

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி. இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த கலா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களது மகன் வெங்கடேஷ் (வயது 8). கலா, பெங்களூருவில் கணவருடன் வசித்து வருவதால் சிறுவன் தளி அருகே ஓசூர் அக்ரஹாரம் பகுதியில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளியில் விடுதியில் தங்கி 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்தநிலையில் தேன்கனிக்கோட்டையில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதற்காக கலா, கணவருடன் தாயார் வீட்டுக்கு வந்தார். கோவில் திருவிழாவுக்காக கலா விடுதியில் தங்கி படித்த மகனை ஊருக்கு அழைத்து வந்தார். நேற்று முன்தினம் நரசிம்மமூர்த்தி, மகனுடன் அந்த பகுதியில் உள்ள தேவராஜன் ஏரி பகுதிக்கு சென்றார். அப்போது மாணவன் வெங்கடேஷ் ஏரியில் இறங்கிய போது திடீரென தண்ணீரில் தவறி விழுந்தான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நரசிம்மமூர்த்தி விரைந்து வந்து மகனை காப்பாற்ற முயன்றார். நீச்சல் தெரியாததால் அவரும் தண்ணீரில் தத்தளித்தார். இதையறிந்த மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் விரைந்து வந்து நரசிம்மமூர்த்தியை மீட்டனர். ஆனால் மாணவன் வெங்கடேஷ் ஏரியில் மூழ்கி இறந்து விட்டான். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இரவு முழுவதும் மாணவனை தேடியும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை மாணவனை 2-வது நாளாக தேடும் பணி நடந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு மாணவனின் உடல் ஏரியில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது அங்கு திரண்டு இருந்த கலா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்