பெண் சத்துணவு பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் முற்றுகை

சாப்பாட்டில் பல்லி கிடந்த விவகாரம் தொடர்பாக பெண் சத்துணவு பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-08-09 22:57 GMT
சேவூர்,



திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் குட்டகம் ஊராட்சி திருமலைக்கவுண்டன் பாளையம் ஆதி திராவிடர் காலனியை சேர்ந்தவர் பாப்பாள் (வயது 42). இவர் திருமலைக்கவுண்டன் பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு பணியாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். ஆனால் அந்த பள்ளியில் அவர் பணியாற்றுவதற்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அத்துடன் பாப்பாளை திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சேவூர் போலீசில் பாப்பாள் புகார் செய்தார். அதன்பேரில் அந்த ஊரை சேர்ந்த 87 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 9 பேரை கைது செய்தனர்.

இதற்கிடையில் திருமலைக்கவுண்டன் பாளையம் பள்ளியில் மாணவர்களுக்கு பரிமாறப்பட்ட சத்துணவில் பல்லி கிடந்ததாக தெரிகிறது. இதனால் ஒரு மாணவி வாந்தி எடுத்தார். அதைத்தொடர்ந்து சத்துணவு சாப்பிட்ட 25 மாணவ-மாணவிகள் அவினாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது தொடர்பான புகாரை தொடர்ந்து அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பரமசாமி மற்றும் போலீசார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி, வட்டார வளர்ச்சி அதிகாரி (ஊராட்சிகள்) பிரபாகர், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பரிசோதனைக்காக உணவை எடுத்து சென்றனர்.

இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகலா, சத்துணவு பணியாளர் பாப்பாளின் அஜாக்கிரதையாலும், கவனக்குறைவாலும் உணவில் பல்லி விழுந்துள்ளது என்று போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் சுகாதாரமான முறையில் தான் சமையல் செய்ததாக பாப்பாள் தெரிவித்தார். இது தொடர்பாக பாப்பாள் மற்றும் சமையல் உதவியாளர் மல்லிகா ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று திருமலைக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர், சத்துணவு பணியாளர் பாப்பாள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி சேவூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது உணவு பாதுகாப்புத்துறையினர் எடுத்து சென்றுள்ள உணவு பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கை வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடமும், போலீஸ் சூப்பிரண்டிடமும் மனு கொடுப்பதாக கூறிவிட்டு கலைந்துசென்றனர்.

நேற்று பள்ளிக்கு வழக்கம்போல் மாணவ-மாணவிகள் வந்திருந்தனர். அப்போது ஏற்கனவே பல்லி விழுந்த உணவு சாப்பிட்டதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 மாணவிகள் உள்பட 7 பேர் வயிற்று வலி உள்ளதாக பள்ளியில் தெரிவித்தனர். உடனடியாக அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அரசு மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர் பள்ளிக்கு வந்து அந்த மாணவர்களை பரிசோதனை செய்தனர்.
அப்போது தண்ணீர் அதிகமாக குடிக்காத காரணத்தாலும், உணவு குறைவு காரணத்தாலும் தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றனர். பின்னர் அந்த மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்