போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் - 3 பேர் கைது

போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-08-10 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை காந்திசாலை இர்வீன்பாலம் அருகே போக்குவரத்து பிரிவு போலீஸ்காரர் ராஜா நேற்றுமுன்தினம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவர், அந்த வழியாக விதிமுறைகளை மீறி ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை வழிமறித்து, மோட்டார் சைக்கிளின் சாவியை எடுத்தார்.

அப்போது 3 பேரும் போலீஸ்காரர் ராஜாவின் கையை பிடித்து தகராறு செய்தனர். இது குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க ராஜா தனது செல்போனை எடுத்தபோது அதை 3 பேரும் பிடுங்கி கீழே போட்டு உடைத்தனர். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 3 பேரையும் பிடித்து ஆட்டோவில் ஏற்றி தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர்கள், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாட்சி புரத்தை சேர்ந்த காசிநாதன் மகன் சதீஷ்(வயது23), தஞ்சை மானம்புச்சாவடி மிஷின் தெருவை சேர்ந்த டேனியல் மகன் சபேஸ்(24), ஞானம்நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் வீரமணி(24) ஆகியோர் என்பதும், இவர்கள் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், செல்போனை உடைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்