தொழிலாளியை அடித்துக்கொன்ற மேஸ்திரிக்கு 7 ஆண்டு சிறை பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு

கட்டிடத்தொழிலாளியை அடித்துக்கொன்ற வழக்கில் மேஸ்திரிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2018-08-10 23:00 GMT
பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் அம்மன் நகர், 9-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜி (வயது 27). கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி பானு(25). இவர்களுக்கு சந்தோஷ்(8) என்ற மகனும், சாதனா(6) என்ற மகளும் உள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்தவர் சேகர்(45). கட்டிட மேஸ்திரி. அதே பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த ஒரு வீட்டில் டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு ராஜிவை, சேகர் அழைத்து செல்லவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜி, குடித்து விட்டு வந்து சேகரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

இந்தநிலையில் 27-5-2015 அன்று வேலை முடிந்து மதியம் உணவு சாப்பிட சேகர் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது ராஜி மீண்டும் இது தொடர்பாக சேகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரமடைந்த சேகர், அருகில் இருந்த இரும்பு கம்பியால் ராஜி தலையின் பின்பகுதியில் பலமாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த ராஜி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3-ல் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், கட்டிட மேஸ்திரி சேகர் மீது கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும் செய்திகள்