மழை பாதிப்புக்கு உதவ தயார்: கேரள முதல் மந்திரியுடன் நாராயணசாமி பேச்சு

மழை பாதிப்புக்கு தேவையான உதவிகள் செய்ய தயார் இருப்பதாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை தொடர்புகொண்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்தார்.

Update: 2018-08-10 23:30 GMT
புதுச்சேரி,

கேரள மாநிலத்தில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் தங்களது வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். வெள்ளத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் கேரள மாநிலத்துக்கு உதவ மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் முன்வந்துள்ளன.

முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று பிற்பகல் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது வெள்ளத்தால் இறந்த குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும், கேரள மக்களின் துயரத்தில் தானும் பங்கு கொள்வதாகவும் தெரிவித்தார்.

அப்போது கேரள மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதியளித்தார். அதற்கு பினராயி விஜயன் நன்றி தெரிவித்துக் கொண்டார். இதற்கிடையே புதுவை மாநிலத்தின் ஒரு பிராந்தியமான மாகி கேரள பகுதியில் உள்ளதால் அங்கும் மழை பெய்து வருகிறது. அங்கு பெரிய அளவில் சேதம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்தும் மாகி தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகளை அடிக்கடி தொடர்பு கொண்டும் முதல்-அமைச்சர் நாராயணசாமி கேட்டு வருகிறார். 

மேலும் செய்திகள்