இருதரப்பினரிடையே கோஷ்டி மோதல்; 6 பேர் கைது

நடுவீரப்பட்டு அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில், கார் அடித்து நொறுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர்.

Update: 2018-08-10 21:59 GMT
நெல்லிக்குப்பம், 



நடுவீரப்பட்டு அருகே உள்ள கீரப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் அதே பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் தர்மகர்த்தாவாக இருந்து வருகிறார். இவரது வீட்டின் முன்பு உறவினர்கள் சினிமா பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்து கொண்டிருந்த, அதேபகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவர் ஏன் நடனம் ஆடுகிறீர்கள் என்று கேட்டார். அப்போது அங்கிருந்தவர்கள் சாமிக்கண்ணுவிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இதை தொடர்ந்து, வெங்கடாசலம் தரப்பினரும் சாமிக் கண்ணு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் ஒருவரையொருவர் உருட்டு கட்டையால் தாக்கினர். மேலும் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு காரையும் அடித்து நொறுக்கினர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஜெயக்குமார், ராதாகிருஷ்ணன் மற்றும் சாமிக் கண்ணு, வீரபாண்டி(வயது 27), திருத்தனிமுருகன்(33), திருமுருகன்(29) ஆகியோர் காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, ஜெயக்குமார்(31) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சாமிக்கண்ணு, செந்தூரபாண்டி(23), சவுந்திரபாண்டி, வீரபாண்டி, தணிகாச்சலம்(34), குப்புசாமி(58), பார்த்தசாரதி(60), வேல்முருகன்(60), திருத்தனி முருகன், திருமுருகன் ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, செந்தூரபாண்டி, தணிகாச்சலம், குப்பாசாமி, பார்த்தசாரதி, வேல்முருகன் ஆகியோரை கைது செய்தனர். இதேபோல் சாமிக்கண்ணு கொடுத்த புகாரின் பேரில் வெங்கடாசலம், ஜெயக்குமார், ஜெயமணி, ரமேஷ், ராஜேஷ், கலைமணி, பிரேம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கலைமணியை(46) கைது செய்தனர். இந்த மோதல் சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்