மினிலாரிக்கு அடியில் விளையாடிய 1½ வயது குழந்தை சக்கரத்தில் சிக்கி பலி

பண்ருட்டி அருகே மினிலாரிக்கு அடியில் விளையாடிய 1½ வயது குழந்தை சக்கரத்தில் சிக்கி பலியானாள். மினி லாரியை டிரைவர் கவனிக்காமல் இயக்கியதால் இந்த பரிதாப சம்பவம் நேர்ந்துள்ளது.

Update: 2018-08-10 22:13 GMT
புதுப்பேட்டை, 



இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பண்ருட்டி அருகே உள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 35). இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி (30). இவர்களுக்கு நிவாஷ் (3) என்ற ஆண் குழந்தையும், லத்திகா(1½) என்ற பெண் குழந்தையும் இருந்தனர். நேற்று காலை, நிவாஷ் தனது தங்கை லத்திகாவை தூக்கி கொண்டு தெருவில் உள்ள மற்ற குழந்தைகளுடன் விளையாட சென்றான். தெருவில் குழந்தைகள் அனைவரும் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது பண்ருட்டியில் இருந்து கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு, மினிலாரி ஒன்று நத்தம் கிராமத்துக்கு வந்தது. மினி லாரியை பூங்குணத்தை சேர்ந்த சங்கர்(32) என்பவர் ஓட்டினார். நத்தம் கிராமத்தில் குழந்தை லத்திகா விளையாடி கொண்டு இருந்த தெருவில் மினிலாரியை நிறுத்திவிட்டு, அதில் வந்தவர்கள் ஒரு வீட்டில் கியாஸ் சிலிண்டரை இறக்கினர்.

இந்த நிலையில், குழந்தை மினி லாரியின் கீழ் பகுதிக்கு சென்று விளையாடியதாக தெரிகிறது. இதை பார்க்காத டிரைவர், அங்கிருந்து மினி லாரியை இயக்கி, முன்னோக்கி சென்றார். இதில் பின்சக்கரத்தில் சிக்கிய லத்திகா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தாள். இதை அறிந்த குழந்தையின் பெற்றோர் அங்கு ஓடி வந்து, லத்திகாவின் உடலை பார்த்து கதறி அழுதது, கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து விபத்துக்கு காரணமான மினிலாரியை அடித்து நொறுக்கினர். இந்நிலையில் டிரைவர் சங்கர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். தொடர்ந்து, லத்திகாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய டிரைவர் சங்கரை கைது செய்தனர். மினிலாரி சக்கரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை பலியாகி இருப்பது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

மேலும் செய்திகள்