புதர்களுக்குள் புதைந்து வரும் தடுப்பு கம்பிகள், போலீசார் கவனிப்பார்களா?

புதர்களுக்குள் கேட்பாரற்று கிடந்து வீணாகி வரும் தடுப்பு கம்பிகளை பாதுகாக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-08-10 22:14 GMT
பரமக்குடி,

பரமக்குடி ரெயில் நிலையம் செல்லும் வழியில் போக்குவரத்து போலீசாரின் கட்டுப்பாட்டு அலுவலகம் உள்ளது. இது வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் போக்குவரத்து போலீசார் தங்குவதற்கும், பணிகள் மாற்றுவதற்கும், போக்குவரத்து ஒழுங்கு கருவிகள் வைப்பதற்கு மட்டும் தான் பயன்பட்டு வருகிறது. மற்றபடி ஆவணங்கள் இல்லாமல் பிடிக்கப்படும் வாகனங்கள், குடிபோதையில் ஓட்டி வரும் இருசக்கர வாகனங்கள் போன்றவற்றை நிறுத்தக்கூட இங்கு இடமில்லை.

அவை நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், கோவில் திருவிழாக்கள், அரசியல் கட்சி தலைவர்களின் வருகை மற்றும் ஊர்வலம், மக்கள் கூட்டங்களை கட்டுப்படுத்த தடுப்பு கம்பிகள் போடப்படும்.

அவைகள் பல சமூக அமைப்புகள், பொது நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மூலம் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்படுகின்றன.

அந்த தடுப்பு கம்பிகளை வைக்க போதிய இடம் இல்லாததாலும், போலீசாரின் கவனிப்பு இல்லாததாலும் போக்குவரத்து போலீசார் அலுவலகத்தின் பின்புறம் குப்பைகள், புதர்கள் நிறைந்த இடங்களில் தடுப்பு கம்பிகள் போட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் இவை கேட்பாரற்று கிடக்கிறது. மழையிலும், வெயிலிலும் கிடந்து அவைகள் துருப்பிடித்து வீணாகி வருகிறது.

இதை பார்க்கும் அன்பளிப்பு தாரர்கள் மனவேதனை அடைகின்றனர். எனவே அந்த தடுப்பு கம்பிகளை போலீசார் உரிய வகையில் பாதுகாக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்