புயலில் சிக்கி நீந்தி வந்த மீனவரை இலங்கைக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரை

புயலில் சிக்கி நீந்தி கொண்டிருந்த நிலையில் மீனவர்களால் மீட்கப்பட்டு ராமேசுவரம் வந்த இலங்கை மீனவரை மீண்டும் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளது.

Update: 2018-08-10 23:00 GMT
ராமநாதபுரம்,

இலங்கை மன்னார் மாவட்டம் முருகன்கோவில் 7-ம் வட்டத்தை சேர்ந்தவர் அந்தோணி மகன் மரியதாஸ் (வயது 37). இவர் அதே பகுதியை சேர்ந்த காமசிங்கம் மகன் அன்றன் (20) என்பவருடன் கடந்த டிசம்பர் மாதம் 16-ந்தேதி பைபர் படகில் மீன்பிடிக்க வந்துள்ளார். கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது திடீரென வீசிய கடும் புயலில் சிக்கி பைபர் படகு கவிழ்ந்துஉள்ளது. இதில் அன்றன் கடலில் மூழ்கினார். மரியதாஸ் மட்டும் டீசல் கேனை பிடித்தபடி நீந்திக்கொண்டிருந்தர். அவரை ராமேசுவரம் மீனவர்கள் மரியதாசை மீட்டு ராமேசுவரம் கொண்டு வந்தனர். கடலோர போலீசார் வழக்குபதிவு செய்து ராமேசுவரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மீனவர் என்பதால் அவரை ஜாமீனில் விடுதலை செய்து தூத்துக்குடியில் உள்ள மரியதாசின் அக்கா மகேந்திரன்கவுரியுடன் தங்க வைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக தமிழகத்தில் தங்கியிருக்கும் மரியதாஸ் இலங்கையில் உள்ள தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளை காண்பதற்கும், குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்வதற்கு தன்னை மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி தொடர்ந்து போராடி வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமநாதபுரம் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சப்-கோர்ட்டு நீதிபதியுமான ராமலிங்கத்தை நேரில் சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை மனு அளித்தார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி ராமலிங்கம் மீனவர் மரியதாஸ் மீதான முதல்தகவல் அறிக்கை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து எந்த குற்றமும் செய்யவில்லை என்பதால் திசைமாறி வந்த மரியதாசை திருப்பி அனுப்பி வைக்க போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார்.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நடவடிக்கையின் பயனாக கடலோர போலீசிடமிருந்து இந்த வழக்கு தனுஷ்கோடி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக மேல்விசாரணை செய்யப்பட்டதில் சம்பந்தப்பட்ட மீனவர் மீது எந்த குற்றச்செயலும் இல்லை என்பதாலும், படகு கவிழ்ந்து உயிர்தப்பி வந்தவர் என்பதாலும் மேல்நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்று வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதுதவிர, மீனவர் மரியதாஸ் மீதான முதல் தகவல் அறிக்கை மற்றும் இலங்கையை சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழ் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று மாலை மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமையில் அனைத்து பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீனவர் மரியதாசை மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அரசுக்கு பரிந்துரை செய்வதென முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான அறிக்கையை தமிழக அரசின் பொது செயலாளருக்கு அனுப்பி தொடர் நடவடிக்கை எடுத்து மீனவர் மரியதாஸ் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று கலெக்டர் நடராஜன் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்