முகநூலில் நட்பாக பழகி கப்பலில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி

முகநூலில் நட்பாக பழகி கப்பலில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சத்தை பெற்று கொண்டு ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

Update: 2018-08-10 22:45 GMT
வேலூர்,

வாணியம்பாடியை சேர்ந்தவர் பழனி (வயது 40), தொழிலாளி. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பழனிக்கு, முகநூல் மூலம் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் தினமும் முகநூல் மூலம் பேசி வந்தனர். பழனி தனது குடும்பம், நண்பர்கள் மற்றும் தொழில் குறித்து அவரிடம் கூறி உள்ளார். அந்த நபரும் தனது குடும்பம், தொழில் குறித்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து இருவரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேசி வந்தனர்.

அப்போது அந்த நபர், கப்பலில் பணியாற்றி வருவதாகவும், அங்கு வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.3 லட்சம் வரை செலவாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் வங்கி கணக்கு ஒன்றையும் அளித்துள்ளார்.

அதையடுத்து பழனி, அந்த வங்கி கணக்கில் பல தவணைகளில் ரூ.3 லட்சம் செலுத்தி உள்ளார். ஆனால் உடனடியாக அந்த நபர் கப்பலில் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதையடுத்து பழனி செல்போனில் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, 3 மாதங்களில் வேலை வாங்கி தருவதாக கூறினார். ஆனால் அதன்படி வேலை வாங்கி கொடுக்கவில்லை.

இதற்கிடையே அந்த நபர் சில நாட்களாக முகநூலில் எவ்வித பதிவும் செய்யவில்லை. அதனால் சந்தேகம் அடைந்த பழனி, அவரின் செல்போனை தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. பழனிக்கு அப்போதுதான் முகநூலில் நட்பான நபர் கப்பலில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சத்தை பெற்று கொண்டு மோசடி செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து பழனி நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில், முகநூலில் நட்பாக பழகி கப்பலில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சத்தை பெற்று கொண்டு ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட போலீசார், இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

மேலும் செய்திகள்