தாய் வீட்டை பிரிந்து தனிக்குடித்தனம் சென்ற டி.டி.வி.தினகரன் தர்மம் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை

தாய் வீட்டை பிரிந்து தனிக்குடித்தனம் சென்ற டி.டி.வி.தினகரன் தர்மம் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Update: 2018-08-10 23:15 GMT

திருமங்கலம்,

மதுரை மாவட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த நலிவுற்ற குடும்பங்களுக்கு ஜெயலலிதா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிதி உதவி வழங்கி வருகிறார். அதன்படி திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி ஒன்றியத்தில் நலிவடைந்த 170 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.17 லட்சம் நிதி உதவியை அமைச்சர் நேற்று வழங்கினர். அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:–

அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் ஜெயலலிதா பேரவை சார்பில் கடந்த 15–ந் தேதி மதுரை மாவட்டத்தில் சைக்கிள் பேரணி தொடங்கப்பட்டது. அப்போது மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களை சந்தித்து அரசின் சாதனைகளை எடுத்து கூறினோம். 2–வது கட்டமாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சைக்கிள் பேரணி நடந்தது.

3–வது கட்டமாக வருகிற 17–ந் தேதி திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும், அதை தொடர்ந்து 30–ந் தேதி முதல் அடுத்த மாதம் வரை 14–ந்தேதி வரை தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலும் சைக்கிள் பேரணி நடத்தப்படும். நாங்கள் சைக்கிள் பேரணி செல்லும் இடங்களில் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் எப்போது தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். அந்த தொகுதிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை, துணைக்கோல் நகரம் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பெற்று தந்துள்ளோம். உள்கட்டமைப்பு வசதி, வேலை வாய்ப்பு முகாம் நடத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தோம். அ.தி.மு.க. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளது.

எனவே அந்த பகுதி மக்கள் அ.தி.மு.க.விற்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய தயாராகி விட்டார்கள். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் அணியை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். அவர் தாய் வீட்டை பிரிந்து தனிக்குடித்தனம் சென்று விட்டார். எனவே டி.டி.வி. தினகரன் தர்மம் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. அவரால் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்