காடுவெட்டி குரு இறப்பின்போது அரசு பஸ்கள் சேதம்: பா.ம.க.விடம் இழப்பீடு வசூலிக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு

காடுவெட்டி குரு மரணம் அடைந்த போது சேதப்படுத்தப்பட்ட அரசு பஸ்களுக்கு உரிய இழப்பீட்டை பா.ம.க.விடம் இருந்து வசூலிக்க உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

Update: 2018-08-10 23:00 GMT
மதுரை,

நெல்லையை சேர்ந்தவர் சுந்தரவேல். பொதுப்பணித்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த காடுவெட்டி குரு கடந்த மே மாதம் இறந்தார். இதையடுத்து அவருடைய ஆதரவாளர்கள், அக்கட்சியை சேர்ந்தவர்கள் அரசு பஸ்கள் மீது கல் வீசினர். கடலூர் பகுதியில் பஸ்களை இயக்கவிடாமல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்பகுதியில் நடந்த போராட்டத்தின்போது 17 அரசு பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன. இதேபோல் புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் சென்ற 24 அரசு பஸ்களும் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டன.

அந்த நேரத்தில் மொத்தம் 73 அரசு பஸ்கள் சேதம் அடைந்தன. இவை தற்போது இயங்குவதற்கு தகுதியற்றவையாக உள்ளன. இதனால் ஏற்பட்ட இழப்பை மீட்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே காடுவெட்டி குரு இறந்த சமயத்தில் அரசு பஸ்கள் சேதப்படுத்தப்பட்டதற்கான இழப்பீட்டை பாட்டாளி மக்கள் கட்சியிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தானா? என்பதை முடிவு செய்வதற்காக நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மனுதாரர் ஆஜராகி, நான் ஏற்கனவே 2 வழக்குகள் தாக்கல் செய்துள்ளேன். அரசியலமைப்பின்படி பொதுநல வழக்கை யார் வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கை விசாரணை பட்டியலில் சேர்க்குமாறு ஐகோர்ட்டு பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

மேலும் செய்திகள்