சிறுபான்மையின மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்

சிறுபான்மையின மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவித்துள்ளார்.

Update: 2018-08-10 23:28 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள, தமிழகத்தை சேர்ந்த இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மத்திய- மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் 2018-2019-ம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிபடிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இதேபோல் பிளஸ்-1 வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ., ஐ.டி.சி., வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர் மற்றும் ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) பயில்பவர்களுக்கு பள்ளிமேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2018-19-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் இந்த கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 1 லட்சத்து 33 ஆயிரத்து 404 மாணவ- மாணவிகளுக்கு புதிய கல்வி உதவித் தொகை வழங்க மத்திய அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த கல்வி உதவித்தொகை மாணவ- மாணவிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும். கல்வி உதவித்தொகை மாணவ மாணவியர்கள் புதியது மற்றும் புதுப்பித்தல் இனங்களுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரையிலும் இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாணவ- மாணவிகள் அனைவரும் இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் விடுபடாமல் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் மாணவரது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கல்வி நிலையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆவண நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பாத மாணவ- மாணவிகளின் இணையதள விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

இணையதளத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை மிகுந்த கவனத்துடன் உள்ளடு செய்ய வேண்டும். பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் எந்த நிலையிலும் மாற்றவோ திருத்தவோ இயலாது. புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ- மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவ- மாணவிகளுக்கு தெரிவிக்கவேண்டும்.

இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் இதர நிபந்தனைகள் அடங்கிய விரிவான விளம்பரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்