வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரிகளிடம் ரூ.15 லட்சம் மோசடி 3 பேர் கைது

வேலை வாங்கி தருவதாக கூறி வேலையில்லாத பட்டதாரிகளிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Update: 2018-08-11 21:45 GMT
ஆவடி,

திருமுல்லைவாயல் ஈ.வி.ஆர். நாகம்மை நகரை சேர்ந்தவர் வரதராஜன் (வயது40), ஆவடியை சேர்ந்த காட்வின் (40), அம்பத்தூரை சேர்ந்த ஷெரீப் (40) ஆகிய 3 பேரும் அரசு அனுமதி இன்றி ஆன்லைன் மூலம் தனியார் வேலை வாய்ப்பு இணையதளங்களை பயன்படுத்தி வேலையில்லா பட்டதாரிகளுக்கு பயிற்சி கொடுத்து வேலை வாங்கி தருவதாக கூறினர்.

அவர்களது நிறுவனத்தில் வேலை கேட்டு ஏராளமான பட்டதாரிகள் குவிந்தனர். அவ்வாறு வரும் பட்டதாரிகளிடம் ஆலோசனை கட்டணமாக ரூ. 354 வீதம் வசூலித்தனர். பணத்தை வசூலித்த அவர்கள் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி ஏதும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் அந்த பணத்தை அவர்கள் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதில் பாதிக்கப்பட்ட ஒருவரான ஆவடி காந்தி நகரை சேர்ந்த சேகுவேரா (25 ) என்பவர் இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அவர் ‘3 பேரும் தன்னிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு அதே இடத்தில் சம்பளமின்றி வேலை வாங்கியதாகவும் அதை கேட்டதற்கு ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும்’ தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று மாலை வரதராஜன், காட்வின், ஷெரீப் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் 3 பேரும், பட்டதாரிகள் பலரிடம் சுமார் 15 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக தெரிந்தது.

மேலும் செய்திகள்