தூத்துக்குடி துப்பாக்கி சூடு: விசாரணை ஆணையத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆவணங்கள் ஒப்படைப்பு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் விசாரணை ஆணையத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆவணங்களை ஒப்படைத்துள்ளனர்.

Update: 2018-08-11 22:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந்தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிர் இழந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. அவர் கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி தூத்துக்குடிக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.

தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்கள் அடிப்படையில், தெற்கு பீச் ரோட்டில் உள்ள ஒருநபர் ஆணைய முகாம் அலுவலகத்தில் விசாரணை தொடங்கியது. 2-வது கட்ட விசாரணை கடந்த 2 நாட்கள் நடந்தது. துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள், துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உறவினர்கள் உள்பட மொத்தம் 12 பேருக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது. இதில் 10 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து நேற்று மதியம் 3 மணிக்கு ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் சென்னை புறப்பட்டு சென்றார்.

முன்னதாக, நேற்று காலையில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, மண்டல செயலாளர் இசக்கிதுரை ஆகியோர் தெற்கு பீச் ரோட்டில் உள்ள ஒருநபர் ஆணைய முகாம் அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் வெளியே வந்த வியனரசு நிருபர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, ஒருநபர் விசாரணை ஆணையத்தில் நானும், மண்டல செயலாளர் இசக்கிதுரையும் சிறையில் இருந்தபோது, பிரமாண பத்திரம் தாக்கல் செய்தோம். அதுதொடர்பான ஆவணங்களை இன்று (அதாவது நேற்று) சமர்ப்பிக்க எனக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி எங்களிடம் இருந்த ஆவணங்களை ஆணையத்தில் சமர்ப்பித்து உள்ளோம். மறுபடியும் சம்மன் அனுப்பி விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்