அரசின் மானியத்துடன் கடனுதவி பெற்று இயங்கும் அச்சக குழுமம், ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மையம் சார்பில் அரசின் மானியத்தில் பயன் பெற்ற அச்சக குழுமம், ஆடை தயாரிப்பு நிறுவனத்தை கலெக்டர் கதிரவன் ஆய்வு செய்தார்.

Update: 2018-08-11 22:45 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மையம் சார்பில் அரசின் மானியத்தில் பயன் பெற்ற அச்சக குழுமம், ஆடை தயாரிப்பு நிறுவனத்தை கலெக்டர் கதிரவன் ஆய்வு செய்தார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மாவட்ட தொழில் மைய வளாகத்தில் மத்திய அரசின் ரூ.9.31 கோடி, மாநில அரசின் ரூ.90 லட்சம் மானியத்துடன் கூடிய பங்களிப்பு, குழு பங்களிப்பு ரூ.1.50 கோடி என மொத்தம் ரூ.11 கோடியே 71 லட்சத்தில் அச்சக தொழில் குழுமம் இயங்கி வருகிறது.

இதில் நவீன அச்சு எந்திரங்கள், சுவரொட்டிகள், ஸ்டிக்கர்கள், போர்டுகள் அச்சிடப்படுகிறது. அனைத்து விதமான அச்சு பணிகள் நடைபெறுகிறது. இதன் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், வேலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பயன் பெற்று வருகிறார்கள். கிருஷ்ணகிரியில் அச்சக தொழில் குழுமம் அமைக்கப்பட்டதின் மூலம் அச்சக உரிமையாளர்கள் பயன் பெற்றுள்ளனர். மேலும் தமிழக முதல்-அமைச்சரின் நீட்ஸ் திட்டம் மூலம் 25 சதவீத மானியத்தில் ரூ.14 லட்சம் நிதி உதவி பெற்றுள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் 15 பேர் நேரடி பணியாளர்களாகவும், 50 பேர் மறைமுக பணியாளர்களாகவும் பணிபுரிந்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது மாவட்ட தொழில் மைய மேலாளர் தேவராஜ், உதவி மேலாளர் பிரசன்னா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், சிறு, குறு தொழில் நிறுவன தலைவர் ஏகம்பவாணன் உள்பட பலர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்