மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரத்தை கணினியில் பதிய பயிற்சி - கலெக்டர் தலைமையில் நடந்தது

மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரத்தை கணினியில் பதிவேற்றம் செய்வது தொடர்பான பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது.

Update: 2018-08-11 20:38 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின் மேம்படுத்தப்பட்ட, திருத்தப்பட்ட புள்ளி விவர பதிவேடுகளின் விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தொடர்பான பயிற்சி கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை வருகிற அக்டோபர் மாதம் 31-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் என கணக்கெடுப்பு இயக்குனர் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார்கள், நகராட்சி ஆணையாளர்கள் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின் திருத்தப்பட்ட புள்ளி விவர தகவல்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை முடிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இந்த பணியை மேற்கொள்ளும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் மேற்பார்வையாளர்களை கண்காணித்து பொறுப்பு அலுவலர்கள் விரைந்து பணிகளை முடித்து மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குனர் சுபா, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன் மற்றும் தாசில்தார்கள், ஆணையாளர்கள், கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்