மரக்காணம் கூட்டுறவு சங்கத்திற்கு இயக்குனர்கள், தலைவர் தேர்வு பெற்றதாக அறிவிப்பு: தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் புகார்

மரக்காணம் கூட்டுறவு சங்கத்திற்கு இயக்குனர்கள், தலைவர், துணைத்தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. முறைப்படி தேர்தல் நடத்தவில்லை என தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் புகார் தெரிவித்தன.

Update: 2018-08-11 23:30 GMT
மரக்காணம்,

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வழக்கு தொடுத்தனர். இதனையடுத்து கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் ஐகோர்ட்டு மீண்டும் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தலாம் என்று தீர்ப்பு அளித்தது.

மரக்காணத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்திற்கு முறைப்படி தேர்தல் நடத்தவில்லை. ஆனால் நேற்று தலைவர், துணைத்தலைவர்களை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகளை சிலர் செய்து வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ம.க., விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் மரக்காணம் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு விரைந்து வந்தனர்.

அங்கிருந்த அதிகாரிகளிடம் இது பற்றி விவரம் கேட்டனர். உடனே அதிகாரிகள் நாங்கள் முறைபடி தேர்தல் நடத்தி மரக்காணம் கூட்டுறவு சங்கத்திற்கு 11 இயக்குனர்கள், சங்க தலைவர் மற்றும் துணைத்தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர் என்று தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தி.மு.க. உள்பட மற்ற கட்சிகள் இந்த கூட்டுறவு சங்கத்திற்கு முறையாக தேர்தல் நடத்தாமல் எப்படி இயக்குனர்கள், தலைவர்கள் தேர்ந்து எடுத்து உள்ளர்கள் என்று புகார் தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்டுறவு சங்கத்திற்கு முறைப்படி தேர்தல் நடத்தி இயக்குனர்கள், தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறி கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென்று போராட்டம் நடத்தினார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கூட்டுறவு சங்கத்திற்காக மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். எனவே, நீங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

அதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்த கூட்டுறவு சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்தவில்லை என்றால் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்