மண்டியா அருகே வயலில் இறங்கி நாற்று நட்டார், குமாரசாமி

மண்டியா அருகே நெல் நாற்றுகளை நட்டு வைத்து முதல்-மந்திரி குமாரசாமி நேற்று விவசாய பணிகளை தொடங்கி வைத்தார்.

Update: 2018-08-11 23:44 GMT
மண்டியா,

குமாரசாமி பேசுகையில், மாதந்தோறும் ஒரு நாள் விவசாயிகளுடன் தங்கியிருந்து குறைகேட்க போவதாக அறிவித்தார்.

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக வறட்சியில் சிக்கிய கர்நாடகம் தற்போது பச்சை பசேல் என காட்சி அளித்து வருகிறது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களான குடகு, மண்டியா, மைசூரு, ராமநகர், துமகூரு மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் நிரம்பி வழிகின்றன. இதைதொடர்ந்து வருண பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும் அரசு சார்பில் மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா சீதாபுராவில் உள்ள வயலில் நெல் நாற்று நடவு பணி ஆகஸ்டு 11-ந்தேதி (அதாவது நேற்று) காலை 11 மணிக்கு தொடங்கிவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதல்-மந்திரி குமாரசாமி நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு வந்தார். அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கிய அவர் நேற்று காலை மண்டியாவுக்கு புறப்பட்டு வந்தார். அவருக்கு மண்டியா மாவட்ட ஜனதாதளம் (எஸ்) கட்சி மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் குமாரசாமி, சீதாபுராவில் உள்ள 600 ஆண்டு பழமையான ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். அதையடுத்து அவர் சீதாபுராவில் உள்ள வயலில் நெல் நாற்றுகளை நட்டு மாவட்டம் முழுவதும் விவசாய பணிகளை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். குமாரசாமி மண்டியாவுக்கு வர தாமதம் ஆனதால் காலை 11 மணிக்கு தொடங்க வேண்டிய நிகழ்ச்சி மதியம் 1.45 மணி அளவில் தொடங்கியது.

அப்போது சேறும், சகதியுமான வயலில் இறங்க வசதியாக தனது வேட்டியை மடித்து கட்டிக்கொண்டார். பின்னர் வயலில் நாற்று நடவு பணி தொடங்குவதையொட்டி வருணபகவானுக்கு சிறப்பு பூஜை செய்து குமாரசாமி வழிபட்டார். அதையடுத்து அவர் நெல் நாற்றுக்களை இடது கையில் வைத்துக்கொண்டு வலது கையால் நாற்றுகளை நட்டு மாவட்டம் முழுவதும் விவசாய பணிகளை அவர் தொடங்கிவைத்தார். சுமார் 5 நிமிடங்கள் அவர் நாற்றுகளை நடவு செய்தார். அவருடன் அந்தப் பகுதியை சேர்ந்த 90 பெண் தொழிலாளர்கள் உள்பட 120 தொழிலாளர்கள் நாற்றுகளை நடவு செய்தனர்.

பின்னர் முதல்-மந்திரி குமாரசாமி அங்கு கூடியிருந்த விவசாயிகள், கட்சியினர் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக மாநிலம் முழுவதுமுள்ள மாவட்டங்களில் மாதந்தோறும் ஒரு நாள் விவசாயிகளுடன் தங்கியிருந்து குறை கேட்கும் திட்டம் தொடங்கப்படும். இந்த திட்டத்தின் படி ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு விவசாயிகளுடன் தங்கியிருந்து அவர்களது குறைகளை கேட்டறிந்து, அந்த பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் ஏற்கனவே மாவட்டம் வாரியாக மாதத்தில் ஒரு நாள் கிராமங்களில் தங்கியிருந்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறேன். அதுபோல் நானும் மாதத்தில் ஒரு நாள் விவசாயிகளுடன் தங்கியிருந்து குறைகளை கேட்பேன். எனது தலைமையிலான அரசு விவசாயிகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளையும், பிரச்சினைகளை தீர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறிய நீர்ப்பாசனத் துறை மந்திரி சி.எஸ்.புட்டராஜு, மண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர். அதன் பிறகு அந்த வயலில் வைத்து குமாரசாமி விவசாயிகள், கட்சியினர் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். அவருக்கு ராகி களி, எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் ஆகியவை பரிமாறப்பட்டது. அவற்றை அவர் ருசித்து சாப்பிட்டார். 

மேலும் செய்திகள்