நெகமம் பகுதியில் உள்ள நீர் நிலைகளுக்கு பி.ஏ.பி. வாய்க்கால் தண்ணீரை திருப்பி விட வேண்டும், விவசாயிகள் கோரிக்கை

நெகமம் பகுதியில் உள்ள நீர் நிலைகளுக்கு பி.ஏ.பி. வாய்க்கால் தண்ணீரை திருப்பி விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-08-12 22:45 GMT

நெகமம்,

நெகமம் பகுதியில் பிரதானமாக தென்னை விவசாயம் நடைபெறுகிறது. தென்னைக்கு அதிகபடியான தண்ணீர் தேவைப்படுவதால் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கப்படும் தண்ணீரை கொண்டு சொட்டுநீர் பாசன முறை கையாளப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மழை பெய்யாததால் வறட்சியின் பிடியில் சிக்கிய தென்னை மரங்கள் காய்ந்து கருகின.

காய்ந்த தென்னை மரங்களை வெட்டி அகற்ற முடியாமல் தோப்புகளில் அப்படியே விட்டு விட்டனர். வறட்சியின் காரணமாக விவசாயம் செய்ய முடியவில்லை. விவசாய நிலங்களில் பசுந்தீவனம் கிடைக்காமல் கால்நடைகளை விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில்தான் கடந்த சில வாரங்களாக நெகமம் பகுதியில் தென்மேற்கு பவருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. ஆனால் இந்த மழையால் நிலம் ஈரப்பதம் ஆனதே தவிர நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. கிணறு, ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் குறைவாகவே உள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் கிடைத்தது.

நெகமம் பகுதியில் பருவமழை ஓரளவுக்கு பெய்தாலும் கூட நெகமம், சின்னநெகமம், என்.சந்திராபுரம், உதவிபாளையம், ரங்கம்புதூர், காளியப்பம்பாளையம், வகுத்தம்பாளையம், தேவணாம்பாளையம், கப்பளாங்கரை, கக்கடவு, காணியாலாம்பாளையம், வலசுப்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள குளம், குட்டை மற்றும் தடுப்பணைகள் தண்ணீரின்றி கிடக்கிறது.

எனவே தற்போது ஆழியாறு அணை நிரம்பி உள்ளதால் பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் செல்கிறது. அந்த தண்ணீரை இந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு திரும்பிவிட்டு அவற்றை நிரப்ப வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். இதை அதிகாரிகள் கவனித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்